களர், உவர் நிலங்களை சீர்திருத்தம் செய்யுங்கள்; உயர் விளைச்சல் பெறலாம் - வழிகாட்டும் வேளாண் துறை
தஞ்சாவூர்: களர் மற்றும் உவர் நிலங்களை சீர் திருத்தம் செய்து பயிர் செய்தால், விளைச்சல் பல மடங்கு பெருகும். இதற்காக உயர் விளைச்சலுக்கு உரிய வழி காட்டுகிறது வேளாண்மைத்துறை.
பயிர் விளைச்சலுக்கு வளமான மண் மிகவும் அவசியமானது. பயிருக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் மண்ணிலிருந்து கிடைப்பதால், மண்வளத்தை பாதுகாத்து பராமரிக்க வேண்டியது நமது கடமையாகும். எனவே பிரச்சனைக்குரிய களர், உவர் நிலங்களை சீர்திருத்தி சாகுபடி செய்து உணவு உற்பத்தியை உயர்வடைய செய்வது அவசியம் என தஞ்சாவூம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் நல்லமுத்து ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 5 லட்சம் ஏக்கர் களர் நிலமாகவும், 2. 5 லட்சம் ஏக்கர் உவர் நிலமாகவும் உள்ளது. சாகுபடி செய்யப்படும் நிலப்பரப்பு இதன் காரணமாக குறையாமல் இருக்க, பிரச்சனைக்குரிய இந்த நிலங்களை சீர்திருத்தம் செய்து, சாகுபடிக்கு கொண்டு வருவதுடன், மண் வளத்தை பாதுகாத்து விளைச்சலை உயர்த்துவது உன்னத பணியாகும்.
களர் நிலம்: மண்ணில் சோடியம் கார்பனேட், சோடியம் பை-கார்பனேட் மக்னீசியம் கார்பனேட் உப்புகள் அதிக அளவில் இருந்தால் அது களர் மண்ணாக கருதப்படும்.
தன்மைகள்: மின் கடத்தும் திறன் 4 டெசிமலுக்கு குறைவாக இருக்கும். கார அமிலத்தன்மை 8.5 க்கு மேல் இருக்கும். மாறும் தன்மையுள்ள சோடியம் 15 சதவீதத்திக்கு அதிகமாக இருக்கும். நிலத்தின் மேற்பரப்பில் கரிமப் பொருட்கள் கரைந்து மண்ணின் மேல் கருமை நிறத்தில் படிகிறது. இது கருப்பு களர் நிலம் என அழைக்கப்படுகிறது.
களர் மண் உருவாக காரணம்: பாறைகள் சிதைந்து மண்துகள்கள் உருவாகும் போது பல வகையான தாது உப்புக்கள் உருவாகி, போதுமான மழை இல்லாததால் மண்ணிலேயே தங்கி களர் உருவாகிறது. களர் தன்மையுள்ள உப்பு நீரை அதிகமாக நிலத்தில் பாய்ச்சுவதாலும் களர் தன்மை ஏற்படுகிறது. அடி மண்ணில் உள்ள உப்புக்கள் மேலே வருவதாலும் களர் தன்மை ஏற்படுகிறது. நீர் பாய்ச்சும் வயல்களில் வடிகால் வசதி குறைந்து காணப்படுவதால் மண்ணில் களர் தன்மை ஏற்படுகிறது.
பாதிப்புகள்: களர் நிலத்தில் கோடையில் மண் இறுகியும், மழைக் காலத்தில் குழைந்தும் இருப்பதால் மண் காற்றோட்டம் குறைந்து வேரின் சுவாசம், வளர்ச்சி, உறிஞ்சும் தன்மை போன்றவை பாதிப்படைகிறது. தாவரங்கள் மண்ணில் உள்ள சத்தக்களை எடுத்துக் கொள்ளும் அளவு குறைகிறது. பயிரின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. பயிர்கள் வளர்ச்சி குன்றி இலைகளில் தழைச்சத்து, துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்து குறைபாடு காணப்படும்.
களர் நிலம் சீர் திருத்தம்: களர் நிலத்தை சமன் செய்து சிறு சிறு பகுதிகளாக பிரிந்து முதன்மை, கிளை வடிகால்களை அமைக்க வேண்டும். நான்கு அங்குலம் உயர நீர் தேங்கும் அளவிற்கு வரப்புகளை அமைக்க வேண்டும். பாத்திகளின் உட்புறம் நன்கு ஆழ உழவு செய்ய வேண்டும். பிறகு சேற்று உழவு செய்ய வேண்டும்.
மண் ஆய்வு செய்து, பரிந்துரைப் படி ஜிப்சத்தை பாத்திகளில் சீராக பரப்பி நீர் பாய்ச்சி உழ வேண்டும். நீரை வடித்து மறுபடியும் நீரைப் பாய்ச்சி வடிய விட வேண்டும். இவ்வாறு நான்கு முறை செய்ய வேண்டும். தக்கைப் பூண்டு வாதாமடக்கி, ஆவாரம், வேப்பம் இலைகள் ஏக்கருக்கு 6 டன் வீதம் பசும் தழைகளையோ அல்லது பசுந்தான் உரங்களையோ இட வேண்டும்.
இதர இயற்கை உரங்களான தொழுஉரம், மண்புழு உரம், கம் போஸ்ட், தென்னை நார்க்கழிவு, கரும்பு ஆலை கழிவு அதிக அளவில் பயன்படுத்த வேண்டும். வடிகாலை மேம்படுத்த நல்ல தண்ணீரை பாய்ச்சுவது சிறந்தது. அதிக களரை தாங்கி வளரக்கூடிய கோ.43, திருச்சி 1,3,5 போன்ற நெல் ரகங்களை சாகுபடி செய்ய வேண்டும்.
களர் தன்மையால் பாதிக்கப்படும் பயிர்கள்: பீன்ஸ், கடலை, மொச்சை, எலுமிச்சை.
களர் தன்மையை தாங்கி வளரும் மரங்கள்: கருவேலம், வேம்பு, சவுக்கு, புங்கம்.
உவர் மண்: தண்ணீல் கரையக் கூடிய கால்சியம், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம் உப்புக்கள் குளோரைடு மற்றும் சல்பேட் அயனிகள் அளவுக்கு அதிகமாக இருந்தால் அது உவர் மண் எனப்படும்.
தன்மைகள்: மின் கடத்தும் திறன் 4 டெசிமனுக்கு அதிகமாக இருக்கும். அமில காரத்தன்மை 8-5 க்கு குறைவாக இருக்கும். மாறும் தன்மையுள்ள சோடியம் 15 சதவிகிதத்திற்கு குறைவாக இருக்கும். நிலத்தின் மேல் பரப்பில் வெண்மை நிற உப்புகள் படிந்திருக்கும். இதை வெள்ளை களர் என்றும் அழைக்கப்படுகிறது.
காரணங்கள்: மழை குறைவாக பொழிவதால் நிலத்தில் உள்ள உப்புகள் வெளியேற முடியாமல் மண்ணில் தங்குகிறது. உப்பு நீரை பாசனம் செய்வதாலும் வடிகால் வசதியற்ற இடங்களிலும் உவர் மண் உண்டாகிறது.
பாதிப்புகள்: தாவரங்களின் வளர்ச்சி குன்றி காணப்படுதல், தாவரம் குறைவான நீரை எடுத்துக் கொள்ளுதல், விதைகளின் முளைப்பு திறன் பாதிக்கப்படுதல் ஆகியவை,
சீர்திருத்தும் முறை: நல்ல நீரை தேக்கி, வடிப்பதால் அதிகளவு நிலத்தில் உள்ள உப்பு வெளியேற்றப்படும். இயற்கை உரங்களான தொழு உரம், கம்போஸ்ட், தென்னை நார்க் கழிவு, மண்புழு உரம் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.
பரிந்துரைக்கப்பட்ட நைட்ரஜன் அளவை விட 25 சதம் அதிகமாக இடவேண்டும். உவர் தன்மையை தாங்கி வளரும் பயிர்களை பயிரிட வேண்டும்.
அதிக உப்பு தாங்கி வரைக் கூடிய பயிர்கள்: பருத்தி, கேழ்வரகு
நடுத்தர அளவு உப்பை தாங்கி வளரக் கூடிய பயிர்கள்: தக்காளி, நெல், மக்காச்சோளம், சூரிய காந்தி. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.