பதராகி விட்டது... நிவாரணத்திலும் ஒதுக்கி விட்டார்கள்: சித்திரக்குடி விவசாயிகள் வேதனை
ரூ.35 ஆயிரம் வரை ஏக்கருக்கு செலவு செய்த பயிர்கள் பதராகி உள்ளது கண்டு விவசாயிள் பெரும் வேதனையில் உள்ளனர். சரிக்கு சரியாக அதாவது 50 சதவீதம் வரை ஏக்கருக்கு நெல்பயிர்கள் பதராகி விட்டது.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் சித்திரக்குடி,கல்விராயன்பேட்டை, ராயந்தூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் தொடர் மழையால் பாதித்து பதரான நெற்பயிர்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து நிவாரணம் வழங்க வலியுறுத்தி மனு அளித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது சம்பா, தாளடி பயிர்கள் சாகுபடி நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த மாதத்தில் பெய்த தொடர் மழையால் சாகுபடி பயிர்கள் பாதிக்கப்பட்டன. தஞ்சை மாவட்டத்தில் சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கி பாதிக்கப்பட்டது. இதேபோல் இளம் தாளடி நாற்றுகளும் பாதிப்பை சந்தித்தன. இதனால் விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்தனர். இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சம்பா பயிர்கள் பூக்கும் தருணத்தில் மழை பெய்ததால் நெல்மணிகள் பதராகி விட்டது. இதனால் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் வேளாண்துறை சார்பில் கணக்கெடுப்பு எடுக்கும் பணிகளும் நடந்து வருகிறது.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை, ராயந்தூர், சித்தாயல், குணமங்கலம் , வைர பெருமாள்பட்டி, அய்யாசாமிபட்டி, மருதக்குடி, திருவேங்உடையான்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பதரான நெற்பயிர்களுடன் வந்து அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-
தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழையால் நெற்பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எங்கள் கிராமங்களில் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்களில் 50 சதவீதம் அளவுக்கு பதராகி உள்ளது. இதனால் ஒரு ஏக்கருக்கு சுமார் 8 முதல் 10 மூட்டை வரை பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. ஒரு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் செலவு செய்துள்ளோம்.
இந்த நிலையில் பூதலூர், கோவில்பத்து அதனை சார்ந்த கிராமங்களுக்கு அரசு நிவாரணம் அறிவித்துள்ளது. ஆனால் பூதலூர் தாலுகா பிர்காவில் உள்ள சித்திரக்குடி, ராயந்தூர், புதுகல்விராயன்பேட்டையை சார்ந்த கிராமங்களுக்கு உரிய நிவாரணம் அரசு அறிவிக்கவில்லை. எனவே எங்கள் கிராமங்களில் உரிய முறையில் கள ஆய்வு செய்து மேற்படி கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரண வழங்க வேண்டு. மேலும் உடனே தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.
இதே போல் கல்விராயன்பேட்டை ஊராட்சியில் உள்ள விவசாய நிலங்களை ஆயிரக்கணக்கான பன்றிகள் நாசப்படுத்தி உள்ளது. எனவே பன்றிகளை அப்புறப்படுத்தி பயிர்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் வரும் 6-ந்தேதி பூதலூர் பகுதியில் அனைத்து விவசாயிகளும் சேர்ந்து அறப்போராட்டம் நடத்துவோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உரிய நிவாரணம் கேட்டு பதரான நெற்பயிர்களுடன் வந்து விவசாயிகள் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரூ.35 ஆயிரம் வரை ஏக்கருக்கு செலவு செய்த பயிர்கள் பதராகி உள்ளது கண்டு விவசாயிள் பெரும் வேதனையில் உள்ளனர். சரிக்கு சரியாக அதாவது 50 சதவீதம் வரை ஏக்கருக்கு நெல்பயிர்கள் பதராகி விட்டது. இதனால் எவ்வித பயனும் இல்லை. இப்படி தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் பொருளாதாரத்தில் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறோம். இம்முறை பூதலூர் பிர்காவில் உள்ள எங்களை ஒதுக்கி விட்டு பிற பகுதிகளுக்கு நிவாரணம் அளிக்க விவசாயிகளிடம் தேவையான ஆவணங்கள் பெறப்பட்டுள்ளது. நாங்களும் பாதிப்பை சந்தித்துள்ளோம். எனவே எங்கள் கோரிக்கை மீதும் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர்.