தஞ்சாவூர் விவசாயிகள் வேதனை: நெல் கொள்முதல் நிலையங்களில் குளறுபடி! பயிர் காப்பீடு, நிவாரணம் கோரிக்கை
பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்தும் காலக்கெடுவை டிசம்பர் 15 வரை நீட்டிக்க வேண்டும்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கொள்முதல் நிலையங்களுக்கு நெல் உலர்த்தும் இயந்திரங்கள் வழங்க வேண்டும். பயிர் காப்பீட்டுத் தொகையை உடன் பெற்றுத்தர வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் பிரியங்காபங்கஜம் தலைமையில் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பேசியதாவது:
தோழகிரிபட்டி கோவிந்தராஜ்:- மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தர வேண்டும். குருங்குளம் சர்க்கரை ஆலையின் மொத்த பரப்பளவு 190 ஆகும். இதில் 50 ஏக்கரில் நெல் சேமிப்பு கிடங்கு கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் உள்ள கொள்முதல் நிலையங்களில் நெல் உலர் இயந்திரங்கள் கொடுத்தால் ஈரப்பதம் என்ற கேள்விக்கு இடம் இல்லாமல் போய் விடும். இதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.
பெரமூர் அறிவழகன்:- கடந்த ஆண்டு பருவ மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் நிலவும் நீண்ட கால செயல்திட்டத்தின் குறைகளை போக்கி தொழில்நுட்ப வளர்ச்சியுடன் நிரந்தர தீர்வு காண வேண்டியும், சம்பா தாலடி பருவத்தில் கூடுதல் சாகுபடி இருக்கும் என்பதனால் கூடுதல் கவனத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அம்மையகரம் ரவிச்சந்தர்: நெல் கொள்முதல் செய்வதில் ஏற்பட்ட குளறுபடியால் நெல் மூட்டைகள் தேக்கமடைந்து நெல்மணிகள் முளைத்துவிட்டது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பேரிடர் மேலாண்மை துறை மூலம் ஒரு ஏக்கருக்கு 40,000 இழப்பீடு வழங்க வேண்டும். விளைந்த நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் சம்பா தாலடி சாகுபடி செய்ய தற்போது நாற்றங்கால் தயாரித்து விதைகளை தெளித்து வருகிறோம் இந்த நிலையில் நடவு செய்யப்பட்ட பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 15 கடைசி நாள் என்று அறிவிப்பு ஏற்றுக்கொள்ள முடியாது .எனவே பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்தும் காலக்கெடுவை டிசம்பர் 15 வரை நீட்டிக்க வேண்டும். வடகிழக்கு பருவமழையால் நடவு செய்யப்பட்ட சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. எனவே பாதிக்கப்பட்ட நடவு பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூபாய் 20,000 நிவாரணம் வழங்க வேண்டும்.
பாச்சூர் புண்ணியமூர்த்தி: கிராமத்தில் உள்ள அய்யம்பட்டி - கீரத்தூர் சாலை ,மற்றும் பாலமும் பழுதடைந்துள்ளது. இதனால் அந்த பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் அவதியடைந்து வருகின்றனர். இந்த சாலையை சீர் செய்து தருமாறும், மேலும் இதே கிராமத்தில் உள்ள ஓடை குளம், பாச்சேரி குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆம்பலாப்பட்டு தங்கவேல்: ஆம்பலாப்பட்டு - சிவகொள்ளை வருவாய் கிராமத்தில் வார்டுக்கு ஒரு உலர்க்களம் மற்றும் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். அறுவடை செய்த நெல்லை தார் சாலையில் போடுவதால் போக்குவரத்திற்கு இடையூறும், விவசாயிகளுக்கு நஷ்டமும் ஏற்படுகிறது. தற்போது பெய்த பருவ பருவ மழையில் நெல்மணிகள் நனைந்து முளைத்துவிட்டது. இதனை தவிர்க்க 10 ஊராட்சிக்கு ஒரு சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும். ஒரத்தநாடு வட்டம் மாம்பழப்பட்டு தெற்கு பகுதியில் உள்ள ஆண்டாள் ஏரியின் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அய்யம்பேட்டை முகமது இப்ராகிம் :- தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாசன ஏரிகள், குளங்கள் மற்றும் கடைமடை கிளை வாய்க்கால், வடிகால் வாய்க்கால்களை வருவாய் துறை மூலமாக அளவிடு செய்து அதில் உள்ள தனிநபர் ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பா நெல் நடவு பயீர்களில் செம்படையான் குறுத்து பூச்சிகள் தாக்குவதை உடனே கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாபநாசம் வட்டம் அய்யம்பேட்டை பேரூராட்சியில் உள்ள அனைத்து சாலைகளில் தார் சாலைகள் போடவேண்டும் குடமுருட்டி உயர்மட்ட மேம்பாலத்தை உடனே மக்கள் பயன்பாட்டுக்கொண்டு வரவேண்டும்.
கண்ணன்: ராயமுண்டான்பட்டி கொள்முதல் நிலையத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். தஞ்சை டெல்டாவில் உள்ள அனைத்து நேரடி கொள்முதல் நிலையங்களுக்கும் நிரந்தர கட்டிடம் உலர் களம், உலர் இயந்திரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு இயற்கை சீற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறைய வாய்ப்பு உள்ளது. அடஞ்சூர் கழுமங்கலம், களர்பட்டி, அம்மையகரம், ஒரத்தூர், பூதலூர், கோவில்பத்து வீரமரசன்பேட்டை உட்பட பல பகுதிகளில் குறுவைப் பயிர் கடுமையான புகையான் பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்டது. சில வயல்களில் அறுவடை செய்ய வேண்டுமா என விவசாயிகள் நினைக்கும் அளவிற்கு பாதிப்பு இருந்தது. ஏக்கருக்கு சுமார் 12 மூட்டைகள் மட்டுமே மகசூல் கிடைத்தது. எனவே புகையான் தாக்குதலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினர்.





















