உரக்கடைகளில் திடீர் ஆய்வு! விவசாயிகளுக்கு எச்சரிக்கை - மீறினால் கடும் நடவடிக்கை!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மொத்த மற்றும் சில்லரை உரிமம் பெற்ற உர விற்பனையாளர்கள் மானிய உரங்களை பிற மாவட்டங்களுக்கு விற்பனை செய்வதோ அல்லது பிற மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்வதோ கூடாது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உரக்கடைகளில் வேளாண்மை உதவி இயக்குநர் திடீராய்வு மேற்கொண்டார். மானிய உரங்களை பிற மாவட்டங்களுக்கு விற்பனை செய்வதோ அல்லது பிற மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்வதோ கூடாது என எச்சரிக்கை விடுத்தார்.
உரக்கடைகளில் திடீர் ஆய்வு
விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது விவசாயிகள் நெல், மக்காச்சோளம், மணிலா, உளுந்து, கரும்பு மற்றும் தென்னை ஆகிய பயிர்கள் சாகுபடி செய்து வருகின்றனர். மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களுக்கு தேவையான ரசாயன உரங்களான யூரியா 4627 மெ.டன், டிஏபி 2844 மெ.டன், பொட்டாஷ் 1288 மெ.டன், காம்ப்ளெக்ஸ் 6693 மெ.டன், சூப்பர் பாஸ்பேட் 1754 மெ.டன் ஆகியவை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மொத்த மற்றும் சில்லரை உரிமம் பெற்ற உர விற்பனையாளர்கள் மானிய உரங்களை பிற மாவட்டங்களுக்கு விற்பனை செய்வதோ அல்லது பிற மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்வதோ கூடாது. மேலும், இது தொடர்பான ஆய்வின்போது கண்டறியப்பட்டாலோ அல்லது புகார் ஏதும் பெறப்பட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உர விற்பனை உரிமத்தில் அனுமதி பெற்ற நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்து, அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே இருப்பு வைத்து விற்பனை செய்திட வேண்டும். உர விற்பனையாளர்கள் அனுமதி பெறாமல் கலப்பு உரங்களை கொள்முதல் செய்வதும், விவசாயிகளுக்கு விற்பனை செய்வதும் கூடாது.
அதிகபட்ச விலைக்கு மேல் உரங்களை விற்பனை செய்யக்கூடாது
உர மூட்டையின் மேல் அச்சிடப்பட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மேல் உரங்களை விற்பனை செய்யக்கூடாது. விற்பனை நிலையத்தில் உர இருப்பு மற்றும் விலை விவரப் பலகையினை விவசாயிகளின் பார்வையில் தெரியும்படி வைத்து தினசரி பராமரிக்கப்பட வேண்டும். உரங்களை விற்பனை முனையக் கருவி மூலம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். விற்பனை முனையக் கருவியில் உள்ள இருப்பும், உண்மை இருப்பும் சரியாக இருக்குமாறு உர இருப்பு விவரத்தினை பராமரித்திட வேண்டும். விவசாயிகளுக்கு தேவையற்ற இடுபொருட்களை இணைத்து விற்பனை செய்யக்கூடாது. தரமற்ற மற்றும் போலியான உரங்களை விற்பனை செய்யக்கூடாது.
மேலும், மாவட்டத்தில் உர ஆய்வாளர்கள் திடீர் ஆய்வு மேற்கொள்ளும்போது உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்தல், விவசாயம் அல்லாத தேவைகளுக்கு மானிய உரங்களை விற்பனை செய்தல், உரம் கடத்தல், பதுக்கல் ஆகிய செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985 மற்றும் அத்தியாவசிய பண்டங்கள் சட்டம் 1955 மற்றும் உர நகர்வு கட்டுப்பாட்டு ஆணை 1973 ஆகியவற்றின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மீறினால் உர உரிமம் ரத்து செய்யப்படும் என எம்.என்.விஜயகுமார், வேளாண்மை உதவி இயக்குநர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) தெரிவித்தார்.





















