மேலும் அறிய
முல்லை பெரியாறு அணை: 2025 பருவமழைக்குப் பின் பாதுகாப்பு உறுதி.. இரு மாநிலங்களுக்கும் சுமூக தீர்வு!
பேபி அணையில் மரம் வெட்டுவது அனுமதி தொடர்பாக மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்க உள்ளது - அனில் ஜெயின்.

முல்லை பெரியாறு அணை தொடர்பான கூட்டம்
Source : whatsapp
2025 பருவமழைக்குப் பிறகு முல்லை பெரியாறு அணையின் நிலை குறித்து ஆய்வுசெய்தோம், முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது. இரு மாநில அதிகாரிகளுடன் ஆலோசனைகளில் பல பிரச்னைகளுக்கு சுமூகமாக தீர்வு ஏற்பட்டது- தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அனில் ஜெயின் பேட்டி.
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி, தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் அனில் ஜெயின் தலைமையிலான 7 பேர் கொண்ட புதிய கண்காணிப்பு குழு மத்திய அரசால் கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டது. இந்த கண்காணிப்பு குழுவானது இன்று கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேக்கடி படகு துறைக்கு சென்று படகு மூலமாக அணையில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகளாக நீர்வளத்துறை செயலாளர் ஜெயகாந்தன், காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்ரமணியனும், கேரள அரசின் பிரதிநிதிகளாக கேரள மாநில நீர்ப்பாசனத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிஸ்வந்த் சின்ஹா, நீர்ப்பாசனத் துறை தலைமைப் பொறியாளர் பிரியேஷ் மற்றும் கண்காணிப்பு குழுவை சேர்ந்த உறுப்பினர்களான தேசிய பேரிடர் மேலாண்மை குழு அலுவலர் ராகேஷ் டொடேஜா, பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவன ஆய்வு அலுவலர் ஆனந்த் ராமசாமி ஆகிய 7 பேர் கொண்ட குழுவினர் இடம்பெற்றனர்.
அணைப்பாதுகாப்பு குழு
இந்த கண்காணிப்பு குழுவானது முல்லைப் பெரியாறு பிரதான அணை, பேபி அணையின் மதகுகள், சுரங்க பகுதியின் நீர்மட்டம் மற்றும் கசிவு நீர் அளவுகள் உள்ளிட்டவைகள் குறித்தும் ஆய்வு செய்தனர். ஆய்வினை தொடர்ந்து மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் கண்காணிப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் அனில் ஜெயின் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகளாக நீர்வளத்துறை செயலாளர் ஜெயகாந்தன், காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்ரமணியன், கேரள அரசின் பிரதிநிதிகளாக கேரள மாநில நீர்ப்பாசனத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிஸ்வந்த் சின்ஹா, நீர்ப்பாசனத் துறை தலைமைப் பொறியாளர் பிரியேஷ் ஆகியோரும் அணைப்பாதுகாப்பு குழுவின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
பேபி அணைப்பகுதியில் மரங்களை வெட்டுவதற்கான அனுமதி
இந்த கூட்டத்தின் போது தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலத்தின் கருத்துகள் மற்றும் கோரிக்கைகள் கேட்கப்பட்டு அதற்கான தீர்வுகள் குறித்து ஆணைய தலைவர் முன்பாக ஆலோசிகப்பட்டது. இதில் முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு, சாலையை பயன்படுத்துவது பேபி அணைப்பகுதியில் மரங்களை வெட்டுவதற்கான அனுமதி, இரு மாநிலங்களும் உபகரணங்களை எடுத்துசெல்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இந்த நான்காவது மேற்பார்வைக் குழு கூட்டத்தை நடத்தினோம், இன்று காலை நாங்கள் அந்த அணையைப் பார்வையிட்டு ஆய்வு செய்தோம் அணையின் கருவிகள், நீர் இயந்திரங்கள், அணையின் அமைப்பை பார்வையிட்டோம், 2025 பருவமழைக்குப் பிறகு அணையின் நிலையை பார்வையிட்டோம். இதில் இதுவரை அணைக்கு எந்த பாதிப்பும் இல்லை, அணை தற்போது நல்ல நிலையில் உள்ளது என்றார். இன்று நடைபெற்ற மேற்பார்வைக் குழுவில் இரு மாநில அதிகாரிகளையும் சந்தித்தது பல பிரச்னைகளில் சுமூகமான தீர்வு காணப்பட்டது. தமிழ்நாடு அரசு கேரள அரசுடன் சில கருவிகளைப் பகிர்ந்து கொள்ளும், மேலும் கேரள அரசு தமிழ்நாடு அரசுக்கு வனப்பகுதி வழியாக அணை தளத்திற்கு சரியான அணுகல் பாதையை அனுமதிக்க ஒப்புக்கொண்டது.
பேபி அணையில் மரம்வெட்டுவது அனுமதி தொடர்பாக தமிழக அதிகாரிகள் ஏதேனும் கோரிக்கை விடுத்துள்ளார்களா? என்ற கேள்விக்கு பதிலளித்தபோது
மரங்களை வெட்டுவதற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்க உள்ளது. இப்போது இந்த அனுமதியை வழங்குவதற்கான நடைமுறையை விரைவுபடுத்த மத்திய சுற்றுச்சூழல் துறையை அணுக இரு மாநிலங்களும் ஒப்புக்கொண்டுள்ளன என்றார்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















