அதிக லாபம் தரும் புதிய பயிர் ரகங்களை கண்டறிய வேண்டும் - வேளாண் ஆராய்ச்சியாளர்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்
இயற்கை விவசாயத்தில் களைகள் தான் பெரும் சவாலாக உள்ளது. களை கொல்லி மருந்துகளை அடிக்க முடியாது. எனவே, களைகளை அழிக்கும் தொழில்நுட்பங்களை கண்டறிய வேண்டும்
தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் வைத்து தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் நடைபெறும் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த மண்டல ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி தலைமை வகித்து ஆய்வுக் கூட்டத்தை தொடங்கி வைத்தார்.தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக வேளாண்மை- உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் தமிழக வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசும்போது, “விவசாயிகளுக்கு தேவையான புதிய தொழில்நுட்பங்களை கண்டறிந்து, அதனை உடனுக்குடன் விவசாயிகளுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான பல இயந்திரங்களை வழங்கி வருகிறோம். அந்த இயந்திரங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என விவசாயிகளுக்கு பயிற்சிகளை அளிக்க வேண்டும். பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வேளாண்மைத் துறை அதிகாரிகள் விவசாயிகளை நேரடியாக சந்தித்து அவர்களது குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.
அதிகாரிகளும், வேளாண் ஆராய்ச்சியாளர்களும் கிராம அளவில் 15 நாட்களுக்கு ஒரு முறை கூட்டங்களை நடத்த வேண்டும். அது தொடர்பான அறிக்கையை அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இது தொடர்பாக வேளாண்மை துறை ஆணையர் மற்றும் இயக்குநர் அனைத்து மாவட்ட வேளாண்மை துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். அதிகாரிகள் மாதம் தோறும் எத்தனை கூட்டங்களை நடத்த வேண்டும் என இலக்கு நிர்ணயிக்க வேண்டும்.
மேலும், ஆராய்ச்சியாளர்கள் புதிய பயிர் ரகங்களை உருவாக்க வேண்டும். நோய் மற்றும் பூச்சி தாக்குதல்களை தாங்கக்கூடிய, விவசாயிகளுக்கு அதிக லாபம் தரக்கூடிய நெல், உளுந்து, கரும்பு, பருத்தி போன்ற பயிர் ரகங்களை உருவாக்க வேண்டும். இந்த புதிய ரகங்கள் குறித்து விவசாயிகளிடம் நம்பகத்தன்மையை ஏற்படுத்த வேண்டும். ஆராய்ச்சியாளர்களும், அதிகாரிகளும் விவசாயிகளை சந்தித்து இந்த ரகங்களை பயிரிட ஊக்குவிக்க வேண்டும். அதிக லாபம் தரக்கூடிய ஏற்றுமதிக்கு ஏற்ற சன்ன ரக நெல் ரகத்தை கண்டறிந்து அதனை பயிரிட விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும்.மேலும், விவசாயிகளுக்கு விதை மற்றும் ஒட்டுக்கன்றுகளை தேவையான நேரத்தில் உற்பத்தி செய்து விநியோகம் செய்திட வேண்டும். மணிலா, எள், பருத்தி பிரித்தெடுக்கும் இயந்திரங்களை கண்டறிந்து விவசாயிகள் உபயோகத்துக்கு கொண்டுவர வேண்டும்.
பருத்தி விதைகளை வடநாடுகளில் தான் கொள்முதல் செய்கிறார்கள். அந்த பருத்தி ரகங்களை இங்கேயே உருவாக்க வேண்டும். பருத்தி உற்பத்தியில் நாட்டில் மூன்றாவது இடத்தில் இருந்த நாம் தற்போது 4-வது, 5-வது இடத்துக்கு சென்றுவிட்டோம். பருத்தி விளைச்சல் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குறைவு. பருத்தி விளைச்சலில் இந்தியாவில் தமிழகத்தை முதலிடத்துக்கு கொண்டு செல்ல பல்கலைக்கழகம் ஆராய்ச்சி செய்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல மக்காசோளம், கம்பு, பருத்தி, காய்கறி போன்ற பயிர்களில் தனியார் ரகங்களின் பயன்பாட்டை குறைக்க வேண்டும். நமது பருநிலைக்கு ஏற்ப பல்கலைக்கழகம் புதிய ரகங்களை உருவாக்கி விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
இயற்கை விவசாயத்தில் களைகள் தான் பெரும் சவாலாக உள்ளது. களை கொல்லி மருந்துகளை அடிக்க முடியாது. எனவே, களைகளை அழிக்கும் தொழில்நுட்பங்களை கண்டறிய வேண்டும். மேலும், களர், உவர் நிலங்களில் பணப்பயிர்களை சாகுபடி செய்யும் தொழில்நுட்பங்களை கண்டறிய வேண்டும். தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள மண்ணுக்கு ஏற்ற அதக மகசூல் தரக்கூடிய மிளகாய், பருத்தி ரகங்களை கண்டறிய வேண்டும். இது தொடர்பான தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு பயிற்றுவிக்க வேண்டும். பயிறு மற்றும் எண்ணெய் வித்து பயிர்களில் பிற மாநில ரகங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதற்கு நிகரான ரகங்களை உருவாக்க வேண்டும். இதுபோன்ற பணிகளை ஆராய்ச்சியாளர்களும், அதிகாரிகளும் இணைந்து செய்தால் வேளாண்மை துறையில் தமிழகம் இந்தியாவின் முதல் மாநிலமாக மாறும்” என்றார்