லட்சத்தில் லாபம் பெற வேண்டுமா...? சூப்பர் வழி இதோ உங்களுக்காக...!
2025-26 தேனீ வளர்ப்பு மானிய திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், தங்களின் சிட்டா, அடங்கல், ஆதார் அட்டையுடன், தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், விவசாய நிலங்களில் தேனீ வளர்த்தால், பயிர் மகசூல் அதிகரிப்பதோடு, இரட்டிப்பு வருவாய் கிடைப்பதால், பயிற்சி அளித்து, மானியத்துடன் கூடிய தேனீ வளர்ப்பு தொழிலை தோட்டக்கலைத்துறை ஊக்கப்படுத்துகிறது.
தேனீ வளர்ச்சியில் முன்னிலை பெறும் விழுப்புரம் மாவட்டம்
விழுப்புரம் மாவட்டத்தில், தேனீ வளர்ப்பு தொழில் சிறந்த பலன் அளிப்பதுடன், பயிர்களில் மகசூல் அதிகரிக்க செய்வதால், விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில், வேளாண்துறை மூலம் விவசாயிகளுக்கு மானியத்துடன் தேனீ வளர்ப்புக்கு உபகரணங்கள், பயிற்சி அளித்து வருகிறது.
தோட்டக்கலை துணை இயக்குனர் அன்பழகன் கூறுகையில்.,
விழுப்புரம் மாவட்டத்தில், தேனீ வளர்ப்பு இரட்டிப்பு பலன் தருவதால், விவசாயிகளை ஊக்கப்படுத்தி வருகிறோம். மரக்காணம், கோலியனுார், வானுார், கண்டமங்கலம் வட்டாரங்களில் விவசாயிகள் ஆர்வமாக தேனீ வளர்ப்பை மேற்கொண்டுள்ளனர். தேனீ வளர்ப்பு குறித்து, கோயம்புத்துார் வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலையத்தில் தேவையான பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தாண்டு தோட்டக்கலை துறை மூலம், தேசிய தோட்டக்கலை இயக்ககத்தில், அயல் மகரந்தச் சேர்க்கை அதிகரித்தல் இனத்தின் கீழ், 400 தேனீ பெட்டிகள் தேனீக்களுடனும், 40 தேன் பிழியும் கருவியும் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
தேனீ வளர்ப்பு
தமிழகத்தில் குமரி மாவட்டத்தில் இந்திய தேனீக்கள் அதிக அளவில் வளர்க்கப்படுகிறது. சமவெளி ரகத்தை சமவெளியிலும், மலை ரகத்தை மலைப்பகுதியிலும் பெட்டியில் வளர்க்கலாம். தேனீ பண்ணை அமைக்க, தேனீக்கள் இயற்கையாக எந்த இடங்களில் அதிகமாக இருக்கிறதோ, அந்த இடத்தை தேர்வு செய்யலாம். அந்த இடத்தை சுற்றிலும் 2 கி.மீ., சுற்றளவில் தேனீக்களுக்கு தேவையான மதுரம் மற்றும் மகரந்தம் தரும் செடிகொடிகள் இருக்க வேண்டும். கூட்டின் வெப்ப நிலைக்கும், தேனின் தன்மைக்கும், தேனீக்களுக்கும் துாய்மையான நீர் அவசியம். இதனால் அருகில் கிணறு, ஓடை வாய்க்கால் என ஒரு நீர் நிலை இருக்க வேண்டும். அதோடு, அதிக வெயில், காற்று கனமழை ஆகியவை பணித்தேனீக்களின் உணவு திரட்டும் திறனை பாதிப்பதால், தேனீக்களின் வளர்ச்சிக்கு உகந்த பருவநிலை உள்ள இடமாகவும், மனிதர்கள் கால்நடைகள் அதிகம் இல்லாத பகுதியாகவும் இருக்க வேண்டும்.
தேனீ வளர்க்கும் பெட்டிகளை, நிழலில் ஓடு போட்ட தாழ்வாரம், கீற்று கொட்டகை மரம், புதர் ஆகியவற்றின் கீழ் வெயில் படாமல் வைக்க வேண்டும். தேனீ பெட்டிகளுக்கிடையே 6 அடி இடைவெளியில் சமதளமான தரையில் வைக்க வேண்டும். பெட்டியில் உள்ள தேனீக்களை அவ்வப்போது திறந்து பார்த்து, அவற்றின் நிலை அறிய வேண்டும். தேனீக்களின் தேவைக்கு ஏற்ப செயற்கை முறையில் உணவு கொடுக்கவும், பூச்சி தாக்குதல் அறியவும், தேன் சேர்த்து வைத்துள்ளதா என்பதை அறியவும் பெட்டிகளை திறந்து பார்த்து ஆய்வு செய்ய வேண்டும்.
தேனீக்களுக்கு உரிய பயிர்கள்
புளிய மரம், இலவம், இலுப்பை, சில்வர் ஓக், அகத்தி, அரப்பு கடுக்காய், வேம்பு, புங்க மரம், குதிரை மசால், நாவல், வாகை, கொடுக்காப்புளி, பனை, தென்னை, தக்காளி கத்தரி, வெள்ளரி, கொய்யா, சப்போட்டா, வாழை, முருங்கை ஆகிய பயிர்கள் உள்ள பகுதியில் தேனீ வளர்த்தால், அதிக தேன் சேகரிக்க முடியும். இந்தாண்டு 2025-26 தேனீ வளர்ப்பு மானிய திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், தங்களின் சிட்டா, அடங்கல், ஆதார் அட்டையுடன், தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என்று தெரிவித்தார்.





















