தஞ்சை மாவட்டத்தில் இன்று முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு: கலெக்டர் தீபக் ஜேக்கப் தகவல்
சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூ. 2 ஆயிரத்து 203, பொது ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 2 ஆயிரத்து 183 என மத்திய அரசு அறிவித்துள்ளது.
தஞ்சாவூர்: தஞ்சாவூா் மாவட்டத்தில் குறுவை பட்ட நெல் அறுவடையையொட்டி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று வெள்ளிக்கிழமை (செப்.1) முதல் திறக்கப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளதாவது;
தஞ்சாவூா் மாவட்டத்தில் 2023 - 2024 காரீப் சந்தை பருவத்தில் குறுவை பட்ட நெல் அறுவடையையொட்டி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று 1ம் தேதி முதல் திறக்கப்பட உள்ளன.
பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் 2023 - 2024 ஆம் காரீப் சந்தை பருவத்துக்கு அரசால் நெல்லுக்கான கொள்முதல் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூ. 2 ஆயிரத்து 203, பொது ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 2 ஆயிரத்து 183 என மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசின் உத்தரவின்படி ஊக்கத்தொகையாக சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 107, பொது ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 82 அறிவித்துள்ளது. இதன் மூலம், மொத்தம் சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 2 ஆயிரத்து 310, பொது ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 2 ஆயிரத்து 265 கொள்முதல் தொகையாக (ஊக்கத்தொகை உட்பட) வழங்கப்படும்.
விவசாயிகள் தங்களது நெல்லை அருகிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்றுப் பயனடையலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு 2023ம் ஆண்டு காரீப் பருவத்தில் குறுவை நெல் சாகுபடி நடந்து வந்தது. குறுவை சாகுபடிக்கு தேவையான உரங்கள் விவசாயிகளுக்கு தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை மையங்கள் வாயிலாக விநியோகம் செய்யப்பட்டது.
குறுவை சாகுபடிக்கு தேவையான உர இருப்பு,விநியோகம் குறித்து வேளாண்மை அலுவலர்கள், தோட்டக்கலை அலுவலர்கள், வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை அலுவலர்களை கொண்ட சிறப்பு பறக்கும் படையால் மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு, தனியார் உரக்கடைகள் மற்றும் கலவை உர உற்பத்தி நிறுவனம், மொத்த விற்பனை, சில்லறை விற்பனை மற்றும் கிடங்குகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த ஆய்வின் போது, அதிக விலைக்கு உரங்கள் விற்பனை செய்தல், உரக்கடத்தல், உரப்பதுக்கல் மற்றும் மானியத்தில் விநியோகிக்கப்படும் யூரியாவை விவசாயம் அல்லாத பிற தொழில் நிறுவனங்கள் (தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருள்களாக) பயன்படுத்துவது, யூரியா உரத்துடன் இதர உரங்களையும் வாங்க விவசாயிகளை கட்டாயப்படுத்துவது போன்ற செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டது. இதனால் விவசாயிகளுக்கு உரம் தட்டுப்பாடின்றி வழங்கப்பட்டது. இதையடுத்து பல பகுதிகளிலும் காரீப் பருவ நெல் அறுவடைப்பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று முதல் திறக்கப்படுகிறது.