தூத்துக்குடி: கோரம்பள்ளம் குளம்....வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீர்....விவசாயிகள் வைத்த கோரிக்கை
கோரம்பள்ளம் குளத்தில் இருந்து வெளியாகும் தண்ணீர் வீணாக கடலுக்கு செல்வதை தடுக்க கோரம்பள்ளம் குளத்தின் 24கண் மதகுகளை சீரமைத்துதர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை.
கோரம்பள்ளம் குளத்தில் இருந்து வெளியாகும் தண்ணீர் வீணாக கடலுக்கு செல்வதை தடுக்க கோரம்பள்ளம் குளத்தின் 24 கண் மதகுகளை சீரமைத்துதர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாமிரபரணி பாசனத்தில் ஸ்ரீவைகுண்டம் வடகாலின் கடைசி குளமாக உள்ளது தூத்துக்குடி அருகேயுள்ள கோரம்பள்ளம் குளம். கோரம்பள்ளம் குளத்தின் மூலம் 2262 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட கோரம்பள்ளம் குளத்தில் இருந்து வெள்ளக்காலங்களில் வெளியேறும் உபரிநீர் உப்பாற்று ஓடை வழியாக கடலை சென்றடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கோரம்பள்ளம் குளம் வடக்கு தெற்கு என 2 பிரிவுகளாக அமைக்கப்பட்டுள்ளது.
இதில் அத்திமரப்பட்டி முதல் பெரியநாயகிபுரம் வரை அமைந்துள்ள பாசன குளமாகவும் மற்றொருபிரிவு பெரியநாயகிபுரம் முதல் அந்தோணியார்புரம் வரை என இருப்பிரிவுகளாக கொண்டு பாசன வசதிக்காக பிரிக்கப்பட்டுள்ளது. கோரம்பள்ளம் குளத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.கோரம்பள்ளம் குளத்தில் 24 மதகுகள் உடையது. மேலும் பல கிராம பஞ்சாயத்துகளுக்கு குடிநீர் ஆதாரமாகவும் கோரம்பள்ளம் குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தினை நம்பி பெரியநாயகிபுரம், கோரம்பள்ளம், அத்திமரப்பட்டி, முத்தையாபுரம், வீரநாயக்கன்தட்டு, முள்ளக்காடு, சிறுபாடு, காலங்கரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயம் நடைபெற்று வருகிறது.
ஸ்ரீவைகுண்டம் பாசனத்தில் கோரம்பள்ளம் குளம் கடைசியில் இருப்பதால் தாமிரபரணி தண்ணீர் அடிக்கடி வந்து சேருவதில்லை. இந்நிலையில், கோடை காலங்களில் தூத்துக்குடி மாவட்டத்தின் கடம்பூர், கயத்தாறு, செக்காரக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழையின் காரணமாக ஏற்படும் காட்டாற்று வெள்ளம் கொம்பாடி ஓடை வழியாக கோரம்பள்ளம் குளத்தை சென்றடைகிறது.
கோரம்பள்ளம் குளத்தில் இருந்து ஆண்டுதோறும் மழை காலங்களில் சுமார் 10 டிஎம்சி தண்ணீர் வரை வீணாக கடலுக்கு செல்லும் நிலை உள்ளதாக கூறும் விவசாயிகள், விரைவில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் கோரம்பள்ளம் குளத்தின் 24 கண்மதகுகளை சீரமைக்க வேண்டும் மேலும் முறையாக அதில் ரப்பர் சீட் பொருத்த வேண்டும் எனக்கூறும் விவசாயிகள் குளத்தை தூர்வாரவேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து விவசாயி ராஜேந்திர பூபதியிடம் கேட்டபோது, தற்போது கோரம்பள்ளம் குளத்தில் தண்ணீர் கிடையாது. கோரம்பள்ளம் குளத்தில் உள்ள மண்மேடுகள் அகற்றப்படாததால் தண்ணீரை சேமித்து வைக்க முடிவதில்லை எனக்கூறும் விவசாயிகள், அதனை அகற்ற வேண்டும் என்கின்றனர். சமீபத்தில் பாபநாசம் அணையில் இருந்து திறந்து விட்ட தண்ணீர், கடைசி குளமான கோரம்பள்ளம் குளத்தை அடையும் முன்பே நிறுத்தப்பட்டு விட்டது. இதனால், வாழை பயிர்கள் கருக தொடங்கிவிட்டது. அணைகளில் போதுமான தண்ணீர் இருப்பதால் கோரம்பள்ளம் குளத்திற்கு உடனே தண்ணீர் தந்து மாவட்ட நிர்வாகம் உதவிட வேண்டும் என்கிறார்.