நெல் போல் நிலக்கடலையையும் அரசே கொள்முதல் செய்ய வேண்டும் - தஞ்சை விவசாயிகள் வலியுறுத்தல்
நிலக்கடலை சாகுபடி செய்து அறுவடை முடித்த நேரத்தில் குறைந்த விலைக்கு தனியார் வியாபாரிகளிடம் விற்பனை செய்ய நேரிடுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர்: நிலக்கடலை சாகுபடி செய்து அறுவடை முடித்த நேரத்தில் குறைந்த விலைக்கு தனியார் வியாபாரிகளிடம் விற்பனை செய்ய நேரிடுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதற்கு பதிலாக நெல் கொள்முதல் செய்வது போல் அரசே நிலக்கடலையையும் கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
கைக் கொடுக்கும் நிலக்கடலை சாகுபடி
தஞ்சை மாவட்டத்தில் ஆற்றுப் பாசனம் இல்லாத மேட்டுப் பகுதிகளில் விவசாயிகளுக்கு அதிகளவு கை கொடுப்பது நிலக்கடலை சாகுபடி தான். எள், உளுந்து, பயறு என பயிரிட்டாலும் நிலக்கடலை சாகுபடி முக்கியப் பங்கு வகிக்கிறது. கரிசல், செம்மண் நிறைந்த வானம் பார்த்த பூமியில் நிலக்கடலை சாகுபடியே முதன்மையானதாக உள்ளது.. நெலுக்கு அடுத்தபடியாக நிலக்கடலை சாகுபடிகள் விவசாயிகள் மன நிம்மதி அடையும் வகையில் வருமானம் கிடைத்து வருகிறது.
இயல்பான பரப்பளவு ஆண்டுக்கு 20 ஆயிரம் ஏக்கர்
ஆற்றுப் பாசனம் உள்ள பகுதிகளிலும் நெல் சாகுபடிக்கு அடுத்து நிலக்கடலை சாகுபடி அதிக அளவு விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் பேராவூரணி, சேதுபாவாசத்திரம், மதுக்கூர், பட்டுக்கோட்டை, திருவோணம், ஒரத்தநாடு, அம்மாபேட்டை ஆகிய வட்டாரங்களில் கார்த்திகை, மார்கழி பட்டங்களில் அதிகளவில் கடலை பயிரிடுவது வழக்கம். மாவட்டத்தில் நிலக்கடலை சாகுபடியின் இயல்பான பரப்பளவு ஆண்டுக்கு 20 ஆயிரம் ஏக்கர்.
இந்த ஆண்டு தண்ணீர் தட்டுப்பாட்டால் சம்பா சாகுபடிக்கு பதிலாக நெல் பயிரிடும் விவசாயிகளும் நிலக்கடலை சாகுபடி அதிக அளவு மேற்கொண்டனர். இதனால், நடப்பாண்டு நிலக்கடலை சாகுபடி வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. கார்த்திகை பட்டத்தில் பயிரிட்ட விவசாயிகள் தற்போது அறுவடை செய்து வருகின்றனர். மார்கழி பட்டத்தில் விதைக்கப்பட்ட கடலை அறுவடைக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது.
உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை
ஆனால், சில ஆண்டுகளாக நிலக்கடலைக்கு உரிய விலை கிடைப்பதில்லை. அந்த நிலைமை தொடர்கதையாகி வருவது விவசாயிகளுக்கு வேதனையை ஏற்படுத்தி உள்ளது. நிலக்கடலை சாகுபடியில் ஏக்கருக்கு ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 55 ஆயிரம் வரை செலவாகும். இதன் மூலம் ஏக்கருக்கு 81 கிலோ வீதம் கொண்ட ஏறத்தாழ 10 மூட்டைகள் விளைச்சல் கிடைக்கும். நிலக்கடலையை அரசு கொள்முதல் செய்யாததால், தனியாரிடம்தான் விற்க வேண்டிய நிலை தான் இருந்து வருகிறது. இதனால் விவசாயிகளிடம் குறைந்த விலையில் நிலக்கடலையை வாங்கி அதிக விலைக்கு வியாபாரிகள் வீட்டில் லாபம் பார்த்து வருகின்றனர்.
தரமில்லை என விலை குறைக்கும் வியாபாரிகள்
இந்த நிலை பல ஆண்டுகளாகத் தொடர்கிறது., 81 கிலோ வீதம் கொண்ட தோல் உரிக்கப்பட்ட நிலக்கடலைக்குக்கு ரூ. 7 ஆயிரம் முதல் ரூ. 7 ஆயிரத்து 500 மட்டுமே கிடைக்கிறது. ஏக்கருக்கு ரூ. 70 ஆயிரம் முதல் ரூ. 75 ஆயிரம் வரை மட்டும்தான் வருவாய் கிடைக்கிறது. சில சமயங்களில் தரமில்லை எனக் கூறி கடலை விலையை வியாபாரிகள் மேலும் குறைத்து விடுகின்றனர். இதனால், பாடுபட்டு விளைவித்தும் நியாயமான லாபம் கிடைக்காததால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.
இது குறித்து கடலை சாகுபடி விவசாயிகள் தரப்பில் கூறுகையில், விதைக்கடலைக்கு 37 கிலோ கொண்ட மூட்டைக்கு ரூ. 4 ஆயிரத்து 500}க்கு விற்கப்படுகிறது. இதை விதைத்து விளைந்து, தோலுரிக்கப்பட்ட 41 கிலோ கொண்ட கடலை மூட்டைக்கு ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 2 ஆயிரத்து 500 மட்டுமே விலை கிடைக்கிறது. இந்த மிகப் பெரிய முரண்பாடுக்கு இடையில்தான் விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி செய்து வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் எங்குமே வியாபாரிகள் கிடையாது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் மட்டுமே நிலக்கடலை ஆலைகளும், வியாபாரிகளும் இருக்கின்றனர். ஆலங்குடியில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நிலக்கடலை ஆஸ்திரேலியா, அயர்லாந்து, பிரான்ஸ், இங்கிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால், பாடுபட்டு விளைவிக்கும் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதில்லை.
நிலக்கடலையையும் கொள்முதல் செய்யணும்
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்து நெல் கொள்முதல் செய்வது போல் , நிலக்கடலையையும் அரசே கொள்முதல் செய்ய வேண்டும் இதுகுறித்து விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலும் தொடர்ந்து வலியுறுத்து வருகிறோம். என விவசாயிகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். அரசின் நிலக்கடலையை குறை முதல் செய்தால் தனியார் வியாபாரிகளும் அதே விலைக்கு தான் நிலக்கடலையை விவசாயிகளிடம் வாங்கும் நிலை ஏற்படும்.
இதன் மூலம் நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும். இதற்கான நடவடிக்கையை அரசு எடுக்கும் என்கிற நம்பிக்கையுடன் காத்துக்கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.