அறுவடை இடத்திலேயே கொள்முதல்... தனியார் வியாபாரிகளிடம் நெல்லை விற்பனை செய்யும் விவசாயிகள்
தீபாவளி நெருங்கி வரும் வேளையில் பணமும் உடனடியாக கிடைப்பதால் வியாபாரிகளிடம் நெல்லை விற்பனை செய்கிறோம்.
தஞ்சாவூர்: தஞ்சை அருகே ஆலக்குடி பகுதியில் குறுவை அறுவடை முடிந்து விவசாயிகள் தங்கள் நெல்லை கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர். இருப்பினும் ஏராளமான விவசாயிகள் தனியாரிடம் நெல்லை விற்பனை செய்து வருகின்றனர். இதற்கு காரணமாக நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதத்திற்கு அதிக நெருக்கடி கொடுக்கின்றனர் என்று தெரிவித்துள்ளனர்.
தஞ்சையில் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் தஞ்சை அருகே வல்லம், கல்விராயன்பேட்டை, ஆலக்குடி உள்பட பல இடங்களில் குறுவை அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டு நாட்கள் நன்கு வெயில் அடித்ததால் விவசாயிகள் நெல்லை இயந்திரம் வாயிலாக அறுவடை செய்து முடித்தனர்.
தொடர்ந்து நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்காக காய வைக்கப்பட்டு இருந்த நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதில் தஞ்சை அருகே ஆலக்குடி, கல்விராயன்பேட்டை, சித்திரக்குடி பகுதிகளில் இன்னும் சில விவசாயிகள் குறுவை அறுவடையை தொடங்காமல் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. விவசாயிகள் கொண்டு வரும் நெல் 17 சதவீத ஈரப்பதம் வரை கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்கிடையில் மீண்டும் தஞ்சை மாவட்டத்தில் மழை பெய்ய தொடங்கி உள்ளது. இதனால் விவசாயி காய வைத்த நெல் ஒரு சில பகுதிகளில் நனைந்துள்ளது.
இந்நிலையில் தற்போது விவசாயிகள் தங்கள் வயலில் அறுவடை செய்யும் நெல்லை கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யாமல் உடனடியாக வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகின்றனர். நெல் வியாபாரிகள் 62 கிலோ மூட்டை நெல்லை ரூ.1280க்கு விலைக்கு எடுத்துக் கொள்கின்றனர். மேலும் ஈரப்பதம் பார்ப்பதில்லை. நெல்லை தூற்றுவதும் இல்லை. முக்கியமாக உடனடியாக பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. இதனால் ஏராளமான விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த நெல்லை தனியாரிடம் விற்பனை செய்து வருகின்றனர்.
கொள்முதல் நிலையங்களை விட விலை சற்று குறைவாக இருந்தாலும் உடனடியாக விற்பனை முடிந்து விடுகிறது. இதனால் நெல் கொள்முதல் நிலையத்திற்கு நெல்லை கொண்டு செல்லும் செலவு இருப்பதில்லை. மேலும் அங்கு இரண்டு நாட்கள் வைத்து நெல்லை தூற்றி பின்னர்தான் விற்பனை செய்ய முடியும் என்பதால் உடனுக்குடன் வியாபாரிகளிடம் நெல்லை விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், நெல் கொள்முதல் நிலையத்தில் ஈரப்பதம் 17 சதவீதம் மட்டும்தான். அதற்கு மேல் இருந்தால் மீண்டும் காய வைக்க வேண்டும். 2, 3 நாட்கள் ஆனாலும் அங்கு காவலுக்கு ஒருவரை வைக்க வேண்டும். அவருக்கு சம்பளம், இரவு டிபன், டீ வாங்கி தருவது என்று செலவுகள் அதிகரிக்கிறது. மேலும் கொள்முதல் நிலையங்களை விட விலை சற்று குறைவாக இருந்தாலும் உடனடியாக விற்பனை முடிந்து விடுகிறது. இதனால் நெல் கொள்முதல் நிலையத்திற்கு நெல்லை கொண்டு செல்லும் செலவும் இருப்பதில்லை. தீபாவளி நெருங்கி வரும் வேளையில் பணமும் உடனடியாக கிடைப்பதால் வியாபாரிகளிடம் நெல்லை விற்பனை செய்கிறோம். அறுவடை வயல் பகுதிக்கே வந்து வியாபாரிகள் நெல்லை வாங்கிக் கொள்கின்றனர். ஈரப்பதம் பார்ப்பதில்லை. அறுவடை முடிந்த உடனேயே எடை போட்டு வாங்கிச் செல்கின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.