வடகிழக்கு பருவ மழையில் பயிர்களை காப்பாற்றுவது எப்படி..? - வேளாண் துறை அதிகாரிகள் ஆலோசனை
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் விவசாயிகள் தங்களுடைய விலை நிலத்தில் உள்ள பயிர்களை எப்படி காப்பாற்றுவது என வேளாண்துறை அதிகாரிகள் ஆலோசனை கூறியுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் விவசாயம் சார்ந்த பகுதியாகும் தமிழகத்தில் நெல் விளைச்சல் தஞ்சைக்கு அடுத்தபடியாக திருவண்ணாமலை மாவட்டம் மணிலா விளைச்சலில் தமிழகத்தில் முதல் மாவட்டமாக திகழ்கிறது. அதேபோன்று மல்லிகை பூ உற்பத்தியில் மதுரைக்கு அடுத்தபடியாக மாநிலத்தில் இரண்டாம் இடம் வகிக்கிறது. பால் உற்பத்தியில் நான்காம் இடத்தையும் வகிக்கிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவ மழை இன்னும் சில தினங்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களில் பெய்த தென்மேற்கு பருவமழையின் போது வழக்கத்திற்கு மாறாக மழை பொழிவு அதிகமாக இருந்தது. இதனால் இப்போதைய நிலவரப்படி ஏற்கனவே பெய்த கனமழையால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அணைகள், ஏரிகள், குளங்கள், கிணறுகள் என அனைத்திலும் 60% அளவு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதே போன்று நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இந்நிலையில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிக மழைப்பொழிவு இருந்தால் வேளாண் உற்பத்தி பாதிக்கப்படுமா என்ற அச்சம் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து வேளாண்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் கூறியதாவது;
எதிர்வரும் நாட்களில் பருவ மழை தீவிரம் காட்டினால் அறுவடைக்கு தயாராக உள்ள நெல் மணிலா போன்ற பயிர்கள் பாதிப்பு உள்ளாகும். இதைத் தவிர்க்கும் வகையில் பயிர்களை மழையிலிருந்து பாதுகாக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வயல்களில் நீர் தேங்காமல் இருக்க வரப்புகளை வெட்டி வைக்கவும், தேவைக்கு அதிகமாக உள்ள நீரை வெளியேற்றி விட வேண்டும், அதேபோன்று மண்ணரிப்பை தவிர்க்கும் வகையில் வரப்பு பயிர்களை நடவு செய்யலாம், மேலும் தோட்டக்கலை பயிர்களை பாதுகாக்க அறுவடைக்கு தயாராகும் நிலையில் உள்ள பயிர்களின் அறுவடையை விரைவில் மேற்கொள்ளலாம், கனமழை காரணமாக ஏற்படும் மழை நீர் தேக்கத்தை குறைக்க தகுந்த வடிகால் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
இதைத்தவிர உபரி நீர் வடிந்த பின்னர் நடவு மற்றும் விதைப்பு பணிகளை மேற்கொள்ளலாம் என்றும், காற்றில் ஏற்படும் சேதத்தை தவிர்க்க காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் மூங்கில் கழிகளால் முட்டு கொடுத்து வாழை போன்ற மரங்கள் சேதம் அடையாமல் பார்த்துக் கொள்ளலாம், அதேபோல் வாழையும் மற்றும் மரவள்ளி போன்ற பயிர்களின் அடிப்பகுதியில் மண்ணை அணைக்க வேண்டும், பந்தல், காய்கறிகள், மலர் செடிகள் போன்றவற்றில் காய்ந்து போன இலைகளை அகற்றி விட வேண்டும், பலத்த மழையின் போது ஏற்படும் சேதாரத்தில் இருந்து பயிர்களை காக்க மேற்குறிப்பிட்ட வழிமுறைகளை விவசாயிகள் கடைபிடிக்க வேண்டும் எனக் கூறினர்.