Rahul Gandhi Vijay | ராகுல் கொடுத்த ஐடியா! விஜய் கட்சியின் பின்னணி! விஜயதாரணி சொன்னது என்ன?
விஜய்யை கட்சி ஆரம்பிக்க சொன்னதே காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி என்று சொல்லி விவாதத்தை கிளப்பி வைத்துள்ளார் விஜயதாரணி.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கி சமீபத்தில் கட்சிக் கொடியை வெளியிட்டார். 2026 சட்டப்பேரவை தேர்தலை குறிவைத்து விஜய் அடுத்தடுத்த நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். விஜய்யின் அரசியல் வருகை தமிழக அரசியல் களத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் பேசப்போகும் அரசியல் என்ன? யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார்? தேர்தல் ப்ளான் என்ன என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. விஜய்யுடன் கூட்டணி வைப்பதில் அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டி வருவதால் ஏற்கனவே உள்ள கூட்டணியில் ஏதேனும் மாற்றம் இருக்குமா என்றும் பேசப்படுகிறது.
இந்தநிலையில் விஜய் கட்சி ஆரம்பித்ததன் பின்னணியில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி இருப்பதாக சொல்லியுள்ளார் முன்னாள் எம் எல் ஏ விஜயதாரணி. காங்கிரஸ் கட்சியில் இருந்த விஜயதாரணி அங்கிருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
விஜய்யின் அரசியல் குறித்து செய்தி நிறுவனங்களுக்கு பேட்டியளித்த அவர், நடிகர் விஜய் ஒருமுறை ராகுல்காந்தியை நேரில் சந்தித்ததாகவும், அப்போது காங்கிரஸ் கட்சியில் ஒரு பொறுப்பு வேண்டும் என கேட்டதாகவும் சொல்லியுள்ளார். ஆனால் தமிழ்நாட்டில் பெரிய ஸ்டாராக இருக்கும் நீங்கள் நினைத்தால் தனியாக கட்சி தொடங்கி வெற்றி பெறலாம் என ஐடியா கொடுத்துள்ளார் ராகுல். அதைவிட்டு விட்டு மற்றொரு கட்சியில் எதற்கு பொறுப்பு கேட்கிறீர்கள் என ராகுல் அட்வைஸ் கொடுத்ததாக சொல்லியுள்ளார். அதனை வைத்துதான் விஜய் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாக விஜயதாரணி சொல்லியுள்ளார். தான் இதற்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்ததால் இந்த சம்பவம் பற்றி தனக்கு தெரியும் என்றும் கூறியுள்ளார்.
ராகுல் காந்தி சொன்னதை வைத்துதான் விஜய் கட்சியை ஆரம்பித்தாரா என்ற விவாதம் ஆரம்பமாகியுள்ளது. ராகுல்காந்தி எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்ற போது விஜய் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதற்கு பதில் கொடுத்த ராகுல், ‘நன்றி விஜய். ஒவ்வொரு இந்தியரின் குரலும் ஒலிக்கும் போதுதான் நமது ஜனநாயகம் வலுப்பெறும். இது நம்முடைய ஒருங்கிணைந்த இலக்கு மற்றும் கடமை” என்று கூறியிருந்தார். அப்போதே ராகுல்காந்தி விஜய்யை கூட்டணிக்கு அழைக்கிறாரா என்று பேச்சு அடிபட்டது குறிப்பிடத்தக்கது.