விஜய்யின் தனிப்படை EX. IG தலைமையில் குழு பரபரக்கும் பனையூர் | Karur Stampede | TVK Vijay
கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழக வெற்றி கழகத்தில் உருவாக்கப்பட்ட தொண்டரணிக்கு ஆலோசனை வழங்க ஓய்வு பெற்ற ஐ.ஜி தலைமையில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
கரூர் சம்பவத்திற்கு பிறகு, தமிழக வெற்றிக்கழக கட்சியின் செயல்பாடுகளில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. ஒரு மாதம் அத்தாட்சியை எந்தவித செயல்பாடும் இல்லாமல் முடங்கி இருந்ததாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக, தமிழக வெற்றி கழகம் கட்சி செயல்பாடுகள் மீண்டும் தொடங்கியிருக்கின்றன.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ஆரம்பத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிறகு தானாக, கட்சியின் கட்டமைப்பு வளர்ந்துவிடும் என நினைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கரூர் சம்பவத்திற்கு பிறகு நிர்வாக குழுவை நியமித்தார். நிர்வாக குழு மூலம் இனி அரசியல் முடிவுகள் எடுக்கப்படும் என அக்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். இதுபோக முதல்முறையாக அந்த நிர்வாக குழுவில், அவரது தந்தை ஆதரவாளர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அனுபவம் இருக்கும் ஒரு சில நிர்வாகிகளை வைத்து, கட்சியின் கட்டமைப்பை உருவாக்க விஜய் முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக வெற்றி கழகம் சார்பில் தொண்டர் அணியை உருவாக்க விஜய் முடிவு செய்தார். ஏற்கனவே தொண்டரணையில் ஒரு சில நிர்வாகிகள் இருந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தொண்டரணி நிர்வாகிகள் ஒருங்கிணைக்கப்படாமலே இருந்து வந்தனர். இந்தநிலையில் அவர்களை ஒருங்கிணைக்கும் வகையில் விஜய், தொண்டரணி நிர்வாகிகள் நியமிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்
அதன்படி தமிழ்நாடு முழுவதும் தொகுதிக்கு 2 பேர் வீதம் 468 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட தொண்டரணி நிர்வாகிகளுக்கு ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
தமிழக வெற்றி கழகத்தில் உருவாக்கப்பட்ட தொண்டர் அணிக்கு ஆலோசனை வழங்க ஓய்வு பெற்ற, ஐ.ஜி., தலைமையில் காவல் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்கிறது. உளவுத்துறை மற்றும் காவல்துறையில் பணியாற்றிய ஓய்வு பெற்ற அதிகாரிகள் இந்த குழுவில் இணைக்கப்பட்டுள்ளனர்.
ஓய்வு பெற்ற ஐஜி ரவிக்குமார், ஓய்வு பெற்ற ஏடிஎஸ்பி அசோகன் ஓய்வு பெற்ற டிஎஸ்பி சஃபியுல்லா, உள்ளிட்ட அதிகாரிகளை ஆலோசனைக் குழுவில் விஜய் நியமித்துள்ளார். இவர்கள் மூலம் தொண்டர் அணிகளுக்கு பல்வேறு பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு முழுவதும் கட்சி சார்பில் தொண்டர் அணி நிர்வாகிகளுக்கு பல கட்ட ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்படும். இனி மாவட்ட அளவில் தொடங்கி மாநில அளவில் நடைபெறும் கூட்டங்களை, தொண்டர் அணி நிர்வாகிகள் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து ஒருங்கிணைப்பார்கள். தொண்டரணி நிர்வாகிகளுக்கு சட்டம் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்தும் பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். வருங்காலங்களில் இந்த தொண்டரணியை விரிவுபடுத்தவும் விஜய் திட்டம் வைத்திருப்பதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.





















