TVK Vijay | பலத்தை காட்டிய விஜய் திக்கு முக்காடும் திமுக இறங்கி அடிக்கும் தவெக | Stalin | DMK | TVK
ரசிகர்கள் கூட்டத்தை வாக்குகளாக மாற்றும் மாயாஜாலத்தை தமிழ்நாட்டில் தற்போது வரை நிகழ்த்திய சாதனைக்குச் சொந்தக்காரர் எம்.ஜி.ஆர். மட்டுமே. இந்தநிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் எங்கு சென்றாலும் ரசிகர்கள் கூட்டம் கூடும் நிலையில் அதை வாக்குகளாக தவெக மாற்றுமா? என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழ்நாடு அரசியல் நாளுக்கு நாள் பரபரப்பாகி கொண்டே செல்கிறது. அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆட்சியை கைப்பற்ற அரசியல் கட்சிகள் எடுக்கும் நடவடிக்கைகளும், வியூகங்களும் இந்த அரசியல் களத்தை பரபரப்பாக்கிக் கொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டில் ஆட்சியைத் தக்க வைக்க திமுக-வும், ஆட்சியை எப்படியாவது பிடிக்க அதிமுக-வும் களத்தில் இறங்கியுள்ள நிலையில் இந்த முறை அறிமுக கட்சியாக சட்டமன்ற தேர்தல் களத்தில் குதித்துள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சமீபத்தில் கோயம்புத்தூரில் தனது கட்சி பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்றார். நேற்று சென்னையில் இருந்து விமானத்தில் மதுரைக்கு சென்று தனது பிரச்சார வாகனம் மூலமாக கொடைக்கானலுக்கு ஜனநாயகன் படப்பிடிப்பிற்காக சென்றுள்ளார். விஜய் போன்ற பிரபலம் பொதுவெளியில் வந்தாலே ரசிகர்கள் கூட்டம் சேர்ந்து விடுவது வழக்கமான ஒன்றாகும். அதுவும் அவர் தற்போது அரசியல் தலைவராக உருவெடுத்துள்ள நிலையில் அவரை காண கூடும் கூட்டம் மற்ற கட்சியினருக்கு தலைவலியாக உருவெடுத்து வருகிறது. குறிப்பாக, அதிகளவு இளைஞர்கள் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள விஜய் முதல் தலைமுறை வாக்காளர்களை அதிகளவில் பெறுவார் என்றே அரசியல் வல்லுனர்கள் கணித்துள்ளனர்.
அதேசமயம், தன்னைப் பார்க்க வரும் ரசிகர்கள், பொதுமக்கள் கூட்டத்தை எப்படி வாக்குகளாக விஜய் மாற்றப்போகிறார்? என்பது தவெக முன் உள்ள பெரும் சவாலாக உள்ளது. ஏனென்றால், விஜய்க்காக விக்கிரவாண்டி, பரந்தூர், கோயம்புத்தூர், மதுரையில் கூடிய கூட்டங்கள் அவரின் தனிப்பட்ட செல்வாக்கால் கூடிய கூட்டம் ஆகும். தவெக நிர்வாகிகள் பணம் கொடுத்து அழைத்து வந்த கூட்டம் அல்ல என்பதை நாம் பார்த்தாலே அறிந்து கொள்ள முடியும்.
அரசியலைப் பொறுத்தவரை தன்னை காண வரும் மக்கள், ரசிகர்கள் கூட்டம் அனைத்தும் வாக்குகளாக மாறுமா? என்றால் நிச்சயம் இல்லை என்பதே பதில் ஆகும். விஜய்யை காட்டிலும் தேமுதிக-வின் தலைவராக பதவி வகித்து மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்திற்கு பன்மடங்கு கூட்டம் கூடியது. ஆனால், அந்த கூட்டம் அவருக்கு முதல் தேர்தலில் வாக்குகளாக மாறவில்லை. அந்த மாயாஜாலத்தை தமிழ்நாட்டில் தற்போது வரை நிகழ்த்திய சாதனைக்குச் சொந்தக்காரர் எம்.ஜி.ஆர். மட்டுமே.
இதனால், விஜய் முன்பு தற்போதுள்ள மிகப்பெரிய சவால் ரசிகர்கள் மற்றும் தனக்காக கூடும் கூட்டத்தை வாக்குகளாக மாற்ற முடியுமா? என்பதே மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. இதற்காக அவர் பல்வேறு முன்னேற்பாடுகளையும், வியூகங்களையும் பிரசாந்த் கிஷோருடன் இணைந்து வகுத்து வருகிறார். அதை இனி வரும் நாட்களில் விஜய் செயல்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இன்னும் சில வாரங்களில் தன்னுடைய அரசியல் சுற்றுப்பயணத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்க உள்ள நிலையில் திமுக- மீதான குற்றச்சாட்டுக்களையும், தற்போது பா.ஜ.க. அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளதால் அதிமுக - பா.ஜ.க. மீதான விமர்சனங்களையும் விஜய் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் முன்னெடுத்து வைக்க முடிவு செய்துள்ளார். அதற்காக விஜய் தவெக நிர்வாகிகளை அறிவுறுத்தியுள்ளார்.





















