Thirumavalavan: ”துணை முதல்வர் ஆஃபர் வந்தது” மேடையில் போட்டுடைத்த திருமா! கலக்கத்தில் திமுக!
துணை முதலமைச்சர் பதவி தருகிறேன் என்று சொன்னார்கள் ஆனால் பாஜக, பாமக இருக்கும் கூட்டணிபக்கம் போகவே மாட்டேன் என்று உறுதியாக இருந்தேன் என திருமாவளவன் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு கட்சி ஆரம்பிப்பதன் நோக்கமே அதிகாரத்தை அடைவது தான். அதிகாரத்தை அடைந்தால் தான் அந்த கட்சியின் நோக்கம் நிறைவேறும். அப்படி ஆரம்பக்கட்டங்களில் மேடை தோறும் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற கொள்கை முழக்கத்தோட பேசி வந்த கட்சி தான் திருமாவளாவனின் விசிக. ஆனால் அதற்கான வாய்ப்புகள் இருந்தும் திருமாவளவன் அதை சரியாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் இருக்கிறது.
கடந்த ஆண்டு கூட விசிகவில் இருந்த ஆதவ் அர்ஜூனா ஆட்சி அதிகாரத்தில் பங்கு, துணை முதல்வர் பதவி என்று தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். திருமாவின் சம்மதத்தோடுதான் அவர் இவ்வாறு பேசுகிறார் என்று சொல்லப்பட்டது. திருமாவும் இது நாங்கள் பல ஆண்டுகளாக பேசிக்கொண்டிருக்கும் ஒன்று தான் என்று சொன்னார். திமுக கூட்டணிக்கட்சி தலைவரான ஸ்டாலினும் அது விசிக நீண்ட ஆண்டுகளாக பேசிக்கொண்டிருக்கும் ஒன்று தான் என்று சொன்னதாக தகவல் வெளியானது.
இச்சூழலில் தான் புதுச்சேரியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் தங்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற ஆபர் வந்தது என திருமாவளவன் ஓபனாக பேசியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், ”அதிமுக நமக்கு பல தொகுதிகளை தர தயாராக இருக்கிறது. கூட்டணி அரசுக்கும், ஆட்சிக்கும் உடன்படத்தயாராக இருக்கிறது. போனால் துணை முதலமைச்சரையும் கோரலாம். கூடுதலாக மூன்று , நான்கு அமைச்சர் பதவிகளையும் பெறலாம். இப்படியெல்லாம் ஆசை காட்டிய சிலர் உண்டு. ஆனால் அதையெல்லாம் நான் புறக்கணித்துவிட்டேன்” என்று திருமாவளவன் பேசுயுள்ளார். இவரது இந்த பேச்சுத்தான் தற்போது அரசியல் களத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சியை பிடிக்க வேண்டும் அதிகாரத்தை அடைய வேண்டும் என்பது தான் எந்தவொரு கட்சிக்கும் முக்கியமான கொள்கையாக இருக்கும். அது தான் வேண்டும் என்று விசிகவும் சொல்லிவருகிறது. ஆனால், அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தும் திருமாவளவன் அதை தவறவிட்டுவிட்டார் என்று விசிக தொண்டர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக ஒரு பக்கம் ஆட்சியில் பங்கு தொடர்பாக பேசி வருகிறது, மறுபுறம் தவெக கூட்டணிக்கு வரும் கட்சிக்கு ஆட்சியில் பங்கு கொடுக்கப்படும் என்று கூறியுள்ளது. இச்சூழலில் தான் தனக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவதாக அதிமுக கூறியுள்ளது என திருமா கூறியிருப்பது திமுகவிற்கு அழுத்தம் கொடுக்கிறாரா திருமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளதாக சொல்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.





















