Thamo Anbarasan : ”ஒன்னும் வேலை நடக்கலயே” ரெய்டு விட்ட அமைச்சர்! விழிபிதுங்கி நின்ற அதிகாரிகள்
ஆலந்தூரில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் தா.மோ.அன்பரசன், பார்த்து என்ன பிரயோஜனம் ஒன்னும் வேலை நடக்கலையே என அதிகாரிகளிடம் கடிந்து கொண்டார்.
மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் தேங்காத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் நேரடியாக களத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோவூர், பெரியபனிச்சேரி, கெருகம்பாக்கம், கொளப்பாக்கம் ஆகிய பகுதிகளில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆய்வு மேற்கொண்டார். மேலும் அங்கு அமைக்கப்பட்டிருந்த மழை நீர் கால்வாய்கள் எவ்வாறு தூர்வாரப்பட்டுள்ளது என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் கெருகம்பாக்கம் பகுதியில் மழைநீர் அடையாறு ஆற்றில் கலக்கும் வகையில் தற்காலிக கால்வாய் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அப்போது அங்கு வந்த பொதுப்பணித்துறை அதிகாரியிடம் நீங்க வந்தீங்களா இல்லையா என்று கேட்டதற்கு பார்த்தேன் என்று பதில் கொடுத்தார். அதற்கு பார்த்து என்ன பிரயோஜனம் ஒரு வேலையும் நடக்கவில்லை என அதிகாரியிடம் கூறினார். மேலும் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு சம்பவ இடத்தில் இருந்து அதிகாரிகளுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். கால்வாய்களை முறையாக அமைக்க வேண்டும் எனவும் அதன் மீது போடப்பட்டுள்ள செடி, கொடிகளை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் அளித்த பேட்டியில், எவ்வளவு மழை பெய்தாலும் தொகுதியில் உள்ள மக்கள் பாதிக்காத அளவிற்கு பணிகள் செய்யப்பட்டுள்ளதாக உறுதி அளித்தார்.