Telangana BRS | விரட்டியடித்த கிராம மக்கள் தெறித்து ஓடிய அதிகாரிகள்கற்களை வீசி தாக்குதல்!
தெலங்கானாவில் லாகச்சார்லா கிராமத்தில் கலெக்டர் உட்பட அரசு அதிகாரிகள் மீது கிராம மக்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த தாக்குதலில் பி ஆர் எஸ் கட்சியினரின் தலையீடு இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் துடியல் மண்டலத்தில் அரசு சார்பில் புதிய மருந்தகங்களைத் தொடங்க மாநில அரசு முன்மொழிந்துள்ளது. இதற்காக 1,350 ஏக்கர் நிலம் தேவைப்படும் நிலையில், 156 ஏக்கர் அரசு நிலம் மட்டுமே உள்ளது. இந்நிலையில் முதல்வர் ரேவந்த் ரெட்டி பிரதிநிதித்துவப்படுத்தும் கோடங்கல் சட்டமன்றத் தொகுதியில் அமைந்துள்ள துடியல் மண்டலத்தில் உள்ள ஹக்கிம்பேட், போளேப்பள்ளி மற்றும் லாக்சேர்லா ஆகிய பகுதிகளில் மீதமுள்ள நிலத்தை விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்த அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் நிலத்தின் உரிமையாளர்களிடம் அதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக விகாராபாத் மாவட்ட ஆட்சியர் பிரதீக் ஜெயின், கூடுதல் ஆட்சியர் ஜி. லிங்யா நாயக் மற்றும் கோடங்கல் பகுதி மேம்பாட்டு ஆணையத்தின் (கடா) தலைவர் வெங்கட் ரெட்டி ஆகியோர் லாகச்சார்லா கிராமத்திற்கு சென்றிருந்தனர்.
இந்த ஆலோசனை கூட்டம் கிராமத்திற்கு வெளியே ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததால், கிராமத்தில் கூட்டத்தில் நடத்த வேண்டும் எனக்கூறி அப்பகுதி விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்தனர். இந்நிலையில் அவர்களை சமாதானப்படுத்த அதிகாரிகள் கிராமத்திற்குள் வந்தனர். அப்போது சில உள்ளூர்வாசிகள், அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் வந்த கார்கள் மீது கற்களை எறிவது, அவர்களை துரத்தி கம்புகளை வைத்து தாக்குவது போன்ற செயல்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் 57 நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இந்நிலையில் அதிகாரிகளை தாக்கிய கிராமவாசிகளில் பி ஆர் எஸ் கட்சியின் இளைஞரணி தலைவரும் இருப்பதாகவும், இது முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் நிலைமை கட்டுக்குள் வரும்வரை இண்டர்நெட் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவத்தில் தன்மீது எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை என மாவட்ட ஆட்சியர் ப்ரதீக் ஜெயின் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.