”பாஜக Sleeper Cell நானா?” காங். மீது சசி தரூர் காட்டம்! பொறுப்பு கொடுத்த மோடி!
சசி தரூர் கையில் முக்கிய பொறுப்பு ஒன்றை கொடுத்து காங்கிரஸ் கட்சிக்குள் புயலை கிளப்பியுள்ளது பாஜக. சசிதரூருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினரே போர்க்கொடி தூக்கி வரும் நிலையில், என்னை யாரும் அவமானப்படுத்த முடியாது, எனக்கு என்னோட மதிப்பு தெரியும் என வெளிப்படையாகவே அட்டாக் செய்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பாகிஸ்தான் விவகாரம் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கும் விதமாக மத்திய அரசு அனைத்துக் கட்சிகளின் குழு ஒன்றை உருவாக்கியுள்ளது. 7 கட்சிகளின் எம்.பிக்கள் அடங்கிய குழுவினரை வெளிநாடுகளுக்கு அனுப்பி ஆதரவு திரட்டவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. திமுக சார்பில் கனிமொழியும், காங்கிரஸ் சார்பில் சசி தரூரும் அந்த லிஸ்ட்டில் இருக்கின்றனர்.
ஆனால் சசி தரூருக்கு வெளிநாட்டு குழுவில் இடம் கிடைத்த நொடியில் இருந்து காங்கிரஸுக்குள் பூகம்பம் வெடிக்க ஆரம்பித்துள்ளது. இந்த குழு தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்திய போது, காங்கிரஸ் சார்பில் 4 பேரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதில் சசி தரூர் பெயர் இல்லை என காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் பரிந்துரை செய்யாத ஒரு நபருக்கு பாஜக எப்படி பொறுப்பு கொடுக்கலாம் என சசி தரூருக்கு எதிராக கட்சியினரே எதிர்ப்பு குரல் எழுப்பி வருகின்றனர். கட்சி தலைமையிடம் அனுமதி வாங்கமால் சசி தரூர் எப்படி பாஜகவிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒத்துக் கொள்ளலாம் என்றும் தலைமையிடம் இருந்து அதிருப்தி வந்துள்ளது.
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தன்னை தொடர்பு கொண்டு இந்த குழுவில் இடம்பெற முடியுமா என்று கேட்டதும் உடனே ஒத்துக் கொண்டதாக சசிதரூர் சொல்லியுள்ளார். வெளிநாட்டு விவகாரங்களில் தனக்கு இருக்கும் அனுபவத்தை குறிப்பிட்டு பாஜக கேட்டதால் சம்மதித்ததாக சசி தரூர் தரப்பில் இருந்து விளக்கம் வந்துள்ளது. மேலும் இதுதொடர்பாக பேசிய அவர், ‘நான் இதில் எந்த அரசியலையும் பார்க்கவில்லை. நாம் இந்தியர்கள். நமது நாடு நெருக்கடியில் இருக்கும் போது, ஒரு குடிமகனிடம் அரசு உதவி கேட்டால் சம்மதிப்பதை தவிர உங்களால் என்ன பதில் சொல்ல முடியும்” என பதிலடி கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கிரண் ரிஜிஜு பேசியதுமே கட்சி தலைமைக்கு இதனை தெரிவித்து விட்டேன் என சசி தரூர் தெரிவித்துள்ளார்.
சசி தரூருக்கு பொறுப்பு கொடுத்ததை காங்கிரஸ் விரும்பவில்லையா? சசி தரூரை அவமதிப்பதற்காக தான் இதையெல்லாம் காங்கிரஸ் வெளிப்படையாக சொல்கிறதா என்ற கேள்வி எழுந்தது. இதுதொடர்பாக அவரிடமே கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவ்வளவு எளிதில் என்னை அவமானப்படுத்திவிட முடியாது, எனக்கு என்னுடைய மதிப்பு தெரியும் என கடுமையாக பேசியுள்ளார்.
சசி தரூரை வைத்து கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயல்வதாக காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேபோல் காங்கிரஸ் தலைமை மீது மூத்த தலைவர்களுக்கு இருக்கும் அதிருப்தி சசி தரூர் மூலம் வெளிப்படுவதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு இருக்கிறது.





















