S Ve Sekar VS Annamalai : ”திட்டம் தீட்டிய அண்ணாமலை!கண்டுகொள்ளாத மோடி”ஓரங்கட்டப்படும் சீனியர்கள்?
என்னை 6 முறை கட்சியில் இருந்து நீக்குவதற்கு அண்ணாமலை எவ்வளவு முயற்சித்தும் நடக்கவில்லை என பாஜக வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளார் எஸ்.வி.சேகர்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிராமணர்களை ஓரங்கட்டுவதாக கட்சிக்குள் சிலர் கடுப்பில் இருப்பதாக ஆரம்பம் முதலே பேச்சு இருக்கிறது. இதனை வெளிப்படையாகவே சொன்னார் எஸ்.வி.சேகர். தமிழக பாஜகவில் ஒரு பிராமணர் கூட இல்லாத நிலையை அண்ணாமலை உருவாக்கியிருக்கிறார் என்று போர்க்கொடி தூக்கினார் எஸ்.வி.சேகர். அண்ணாமலை தலைவராக இருக்கும் வரை தமிழ்நாட்டில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என அட்டாக் செய்தார்.
அதுவும் எஸ்.வி.சேகரின் சமூக வலைதள பக்கத்தில் அண்ணாமலைக்கு எதிரான கருத்துகள் வந்து கொண்டே இருக்கும். பாஜகவை சேர்ந்த ஒருவரே கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இப்படி பேசலாமா என அண்ணாமலை ஆதரவாளர்கள் கொந்தளித்து வந்தனர். வாக்குவாதம் மாறி மாறி முற்றிய நிலையில், பாஜகவுக்கு தான் நான் வேண்டும், எனக்கு பாஜக வேண்டாம் என ஒரே போடாய் போட்டார் எஸ்.வி.சேகர்.
இந்த நேரத்தில் தனது நாடக விழாவிற்கு தலைமையேற்க அழைப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்தார். அதன்பிறகு பேசிய அவர், இனி நான் பாஜகவில் இல்லை, எல்லோரும் விரும்பும் திராவிடனாகவே இருக்க விரும்புகிறேன் என அழுத்தம் திருத்தமாக சொன்னார். அண்ணாமலையால் தான் அவர் கட்சியில் இருந்து விலகுவதாக சொன்னது பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி சொல்லி தான் பாஜகவில் இணைந்ததாகவும், ஆனால் அண்ணாமலை இருக்கக் கூடிய கட்சியில் என்னால் ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது என்றும் கடுப்பாகி பேசியுள்ளார் எஸ்.வி.சேகர். தன்னை கட்சியில் இருந்து நீக்குவதற்கு அண்ணாமலை 6 முறை முயற்சி செய்து, மோடி, அமித்ஷாவை சந்தித்தும் ஒன்னும் வேலைக்கு ஆகவில்லை என சொன்னது பேசுபொருளாக மாறியுள்ளது.
கட்சியில் இருப்பவர்கள் சிலரை அண்ணாமலை ஓரங்கட்டுவதாக பேச்சு இருக்கும் நிலையில், எஸ்.வி.சேகரின் பேச்சு அதன் பிரதிபலிப்பாகவே இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு இருக்கிறது. தமிழக பாஜகவில் அண்ணாமலை செய்யும் உள்ளடி வேலைகளை டெல்லி பாஜக கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாமலைக்கு எதிர் தரப்பில் இருக்கக் கூடிய பாஜகவினர் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். மற்றொரு பக்கம், அண்ணாமலையால் தான் தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரிப்பதாகவும், இளைஞர்களுக்கு அதிகம் வாய்ப்பு கிடைப்பதாகவும் அண்ணாமலை ஆதரவாளர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.