Old pension scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
Old pension scheme: பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக அரசு ஊழியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் ஓய்வூதிய திட்டம் தொடர்பாக நாளை முக்கிய அறிவிப்பு வெளியிட இருப்பதாக அமைச்சர்கள் குழு அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகளிடம் வாக்குறுதி அளித்துள்ளது.

அரசு ஊழியர்கள் கோரிக்கை
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன் தீப் சிங் பேடி தலைமையில் குழு ஒன்றை அமைத்தார். இந்த குழு அரசு ஊழியர்கள், நிதி ஆலோசக அதிகாரிகள் என பல கட்ட ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு கடந்த அக்டோபர் மாதம் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தது,
இதனையடுத்து தமிழக அரசு ஓய்வூதியம் தொடர்பாக எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வந்தது. இதனையடுத்து உடனடியாக பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி அரசுஊழியர்கள் போராட்டம் தீவிரம் அடைந்தது. இதனையடுத்து அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் ஆகிய அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தையை நடத்தியது. ஆனால் இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடையாத காரணத்தால் வருகிற ஜனவரி 6ஆம் தேதி காலைவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அரசு ஊழியர்கள் சங்கம் அறிவித்தது. இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக ஓய்வூதியம் தொடர்பாக முழு அறிக்கையும் முதலமச்சர் ஸ்டாலினிடம் சமர்பிக்கப்பட்டது. இதனையடுத்து
பழைய ஓய்வூதிய திட்டம்- நாளை முதலமைச்சர் முக்கிய அறிவிப்பு
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தோடு அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு இன்று தலைமைசெயல்கத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய போட்டோ ஜியோ அமைப்பின் நிர்வாகி அமிர்தகுமார், தங்களது கோரிக்கைகளை அமைச்சர்கள் குழுவிடம் தெரிவித்தார். இதனை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்வதாகும், நாளை பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என அமைச்சர்கள் குழு வாக்குறுதி கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.





















