(Source: ECI/ABP News/ABP Majha)
Priyanka Gandhi slams Modi : ”என்ன மோடி இதெல்லாம்? அதானி கையில் முடிவு” ஆவேசமான பிரியங்கா
உங்களின் ஆப்பிளின் விலை என்ன என்பதை கூட அதானி தான் தீர்மானிக்கிறார் என்று சுட்டிக்காட்டி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார் பிரியங்கா காந்தி.
பாஜகவுக்கு எதிராக ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். வேலைவாய்ப்பின்மை, அதானி விவகாரம், அக்னிவீர் உள்ளிட்டவற்றை கையில் எடுத்து பாஜகவை ரவுண்டு கட்டி வருகிறது காங்கிரஸ். ஹிமாச்சல பிரதேசத்தில் பிரச்சாரம் செய்த பிரியங்கா காந்தி, 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை பிரச்னை அதிகரித்துள்ளதாக விமர்சித்தார். சுமார் 70 கோடி பேர் வேலை இல்லாமல் இருப்பதாகவும், பாஜக கொண்டு வந்த திட்டங்களால் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டியால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும் கூறினார்.
மேலும் பேசிய அவர், ‘நாட்டின் அனைத்து வளங்களும் தற்போது சில கோடீஸ்வரர்களிடம் மட்டுமே சென்று கொண்டிருக்கிறது. நிலக்கரி, சுரங்கங்கள், துறைமுகங்கள், ஏர்போர்ட் என அனைத்துமே மோடியின் நணபர்களுக்கே கொடுக்கப்படுகிறது. ஹிமாச்சலில் பெரும்பாலான குளிர்பதன கிடங்குகள் அதானியிடம் தான் இருக்கிறது. உங்களது ஆப்பிள் என்ன விலை இருக்க வேண்டும் என்று அதானி தான் முடிவு செய்கிறார். அமெரிக்காவில் இருந்து வரும் ஆப்பிளுக்கான ஜிஎஸ்டியை குறைத்திருக்கிறீர்கள், ஆனால் எங்கள் விவசாயிகள் ஜிஎஸ்டி கொடுக்க வேண்டுமா?” என விமர்சித்துள்ளார்.