(Source: ECI/ABP News/ABP Majha)
Priyanka Gandhi : ”60,000 கோடி எப்படி வந்துச்சு? யார் கொடுத்தா மோடி?” எகிறி அடிக்கும் பிரியங்கா
”60,000 கோடி எப்படி வந்துச்சு? யார் கொடுத்தா மோடி?” எகிறி அடிக்கும் பிரியங்கா
பாஜக பணக்கார கட்சியாக மாறியிருப்பதாகவும், பாஜகவுக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்றும் பிரியங்கா காந்தி ஆவேசமாக பேசியுள்ளார்.
மக்களவை தேர்தல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது. ஆட்சியை பிடிக்க பாஜகவும், காங்கிரஸும் போட்டி போட்டு பிரச்சாரம் செய்து வருகின்றன. 6 கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், அடுத்து ஆட்சியமைக்க போவது யார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. பிரதமர் மோடிக்கு எதிராக ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
ஜூன் 1ம் தேதியுடன் மக்களவை தேர்தல் முடிவடையும் நிலையில், பிரியங்கா காந்தி பொதுகூட்டத்தில் கலந்து கொண்டு பாஜகவினரை கடுமையாக விமர்சித்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ‘காங்கிரஸ் 55 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தது. ஆனால் உலகின் பணக்கார கட்சியாக காங்கிரஸ் மாறவில்லை. அதே நேரத்தில் பாஜக 10 ஆண்டுகளில் உலகின் பணக்கார கட்சியாக மாறியுள்ளது. இது எப்படி நடந்தது? இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது? பாஜக கடந்த சில ஆண்டுகளில் 60000 கோடி ரூபாய் பணம் சம்பாதித்துள்ளதாக ஒரு ரிப்போர்ட் சொல்கிறது. ஆனால் அவர்கள் காங்கிரஸை ஊழல் கட்சி என சொல்கிறார்கள். கடவுளின் பெயரை வைத்து வாக்கு கேட்கிறார்கள். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கடவுள் சொல்ல மாட்டார்.
அனைத்து கடவுள்களும், மகான்களும், பெரிய மனிதர்களும் ஒரே ஒரு விஷயத்தை மட்டுமே சொல்லியுள்ளனர். சத்தியத்தின் பாதையைப் பின்பற்றுங்கள் என்பதே அவர்கள் நமக்கு சொல்வது. அதனை வைத்து இமாச்சலப் பிரதேச மக்கள் உண்மையின் பாதையில் நடப்பவரை அடையாளம் காண வேண்டும்” என கூறியுள்ளார்.
பாஜக மதத்தை வைத்து அரசியல் செய்வதாகவும், ஊழலில் ஈடுபடுவதாகவும் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளது பாஜகவினரின் விமர்சன வலையில் சிக்கியுள்ளது.