Pongal Gift : "மக்களுக்கு கொடுக்க நிதி இல்ல அரசு அதிகாரிகளுக்கு bonus-ஆ?" கடுகடுக்கும் மக்கள்!
தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் 1000 ரூபாய் இடம் பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசு ஊழியர்களுக்கு மட்டும் போனஸ் வழங்க பணம் எங்கிருந்து வந்தது என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஒவ்வொரு வருடமும் தைத்திங்கள் முதல் நாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை மேலும் சிறப்பாக்கும் வகையில் தமிழக அரசு கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி வருகிறது. இதில் அரிசி, பருப்பு, வெல்லம் , உலர் திராட்சை, கரும்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 2019 , 2020 ஆம் ஆண்டுகளில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து மக்கள் கூடுதலாக பயன் பெரும் வகையில் ரூபாய் 1000 வழங்கப்பட்டது.
குறிப்பாக கடந்த 2021 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் சேர்த்து 2500 ரூபாய் வழங்கினார். கடந்த 2022ஆம் ஆண்டு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மட்டும் வழங்கப்பட்டது. 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் பரிசு தொகுப்புடன் 1,000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் தான் 2025 பொங்கல் பண்டிகையை ஒட்டி வழங்கப்படும் பரிசு தொகுப்புடன் 1000 ரூபாய் ரொக்கம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் தமிழக மக்கள் பலரும் இருந்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அரசு ஊழியர்களுக்கு போனஸ் தொகையாக ரூ. 163 கோடியே 81 லட்சம் நிதி ஒதுக்கீட்டை அரசு அறிவித்த சூழலில் பொங்கல் தொகுப்பில் 1000 இடம் பெறாதது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் நேரத்தில் எலக்சென் டியூட்டியை அரசு ஊழியர்கள் பார்ப்பதால் அவர்களை குஷிப்படுத்தும் நோக்கில் போனஸ் தொகை அறிவிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களுக்கு மட்டும் போனஸ் வழங்க பணம் இருக்கிறது பொதுமக்களுக்கு 1000 வழங்க பணம் இல்லையா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.