P Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?
திமுகவால் தான் எங்களுக்கு வெளிச்சம் கிடைக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று பதவி ஏற்ற மறுநொடியே அதிரடியாக சொன்னவர்.. தனது செங்குருதியை கம்யூனிஸ்ட் கட்சிக்காக அர்பணித்து பழங்குடி மக்கள், மலை வாழ் மக்களுடன் தோளோடு தோள் நின்று அவர்களது உரிமைகளை பெற்றுக்கொடுத்தவர்.. வாச்சாத்தி மக்களின் போராளி.. அவர் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்.
கடந்த 1960 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் தேதி திருச்சி, லால்குடி பெருவளநல்லூர் கிராமத்தில் பிறந்தவர். கரைக்குடி அருகே உள்ள ராமசாமி தமிழ் கல்லூரியில் பட்டப்படிப்பை பயின்றவர். சிறுவயதில் இருந்தே இடதுசாரி கொள்கைகளில் முகுந்த ஈடுபாடு கொண்ட இவர் 1979 ஆம் ஆண்டு தன்னை மாணவர் சங்கத்தில் இணைத்துக்கொண்டார்.
அப்போதிலிருந்து தீவிர மாணவர் அரசியலில் இயங்கியவர் பெ.சண்முகம். இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர், செயலாளர் என முக்கிய பொறுப்புகளில் இருந்தவர். சி.பி.ஐ (எம்) இயக்கத்தின் முழு நேர ஊழியராக இருந்த பெ.சண்முகம் 1992 ஆம் ஆண்டு உருவான மலைவாழ் மக்கள் சங்கத்தின் முதல் பொதுச் செயலாளராக தேர்வானார்.
தமிழ் நாட்டின் வரலாற்றில் கருப்பு பக்கங்களில் ஒன்றான வாச்சாத்தி வன்கொடுமை சம்பவத்தில் மக்களோடு துணை நின்று.. வச்சாத்தியில் பழங்குடியின மக்கள் மீது காவல் துறையினர் நடத்திய தாக்குதலை கண்டித்து 30 ஆண்டுகளாக சட்டப்போராட்டங்கள் நடத்தி அம்மக்களின் உரிமைகளை மீட்டுக்கொடுத்தவர்.
தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் மா நில பொதுச் செயலாளராக 13 ஆண்டுகள் பணியாற்றியவர். பழங்குடி மக்களின் சாதிச் சான்று கோரிய போராட்டங்களிலும் மலைவாழ் மக்களுக்கான நிலவுரிமை போராட்டங்களிலும் முன்னணியில் போராடியவர். பழங்குடியினர் நிலவுரிமை போராட்டத்தை முன்னெடுத்த இவர் கடந்த 2006 ஆம் நவம்பர் 24 அன்று அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து வனவுரிமைச் சட்டத்தை சாத்தியமாக்கியவர். மத்திய பாஜக ஆட்சிக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தை தமிழ் நாட்டிலிருந்து பல்லாயிர கணக்கான விவசாயிகளை தலைமையேற்று வழி நடத்தியுள்ளார்.
விவசாயிகள் மற்றும் மலைவாழ் மக்களுக்காக தொடர்ந்து களப்பணியாற்றியதால் இவரை கவுரவிக்கும் பொருட்டு கடந்த ஆண்டு தமிழக அரசு அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கி கவுரவித்தது. இச்சூழலில் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மா நில செயலாலராக பொறுப்பேற்று இருக்கிறார் பெ.சண்முகம். இவரது தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சி இனி புதிய உத்வேகத்துடன் நடைபொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது