MK Stalin 100 days Govt : முதல்வர் ஸ்டாலின் 100 நாள் ஆட்சி சிக்சரா?
வருடம் 1969 பிப்ரவரி மாதம் 10ந் தேதி முதலமைச்சராகப் பொறுப்பேற்க இருந்த கருணாநிதியிடம் பத்திரிகையாளர்கள் ’அமைச்சரவைப் பதவி ஏற்பு எப்படி இருக்கும்?’ எனக் கேட்கிறார்கள். ’ஆடம்பரமின்றி எளிமையாக இருக்கும் ஆளுநர் மாளிகையிலே சிக்கனமாக நடைபெறும்’ என பதிலளித்தார் கருணாநிதி. வருடம் 2021, மே மாதம் 7ந் தேதி வரலாறு மீண்டும் திரும்பியது. ஆளுநர் மாளிகையில் ஆடம்பரமின்றி சிக்கனமாக ’முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான்’ என முழங்கி முதலமைச்சர் பொறுப்பேற்றார் மு.க.ஸ்டாலின். புதிய அரசு பொறுப்பேற்றதன் நூறாவது நாள் இன்று. 'மேடைப்பேச்சு சரிவரவில்லை, என்ன இருந்தாலும் கருணாநிதி போன்ற பேச்சு மொழி இல்லை' என பல்வேறு விமர்சனங்களுக்கு இடையே தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நூறு நாட்களை வெளிச்சப்பாய்ச்சலில் கடந்துள்ளது. சிக்ஸர், பவுண்ட்ரி என மைதானத்தில் சுழன்று ஆடினால்தான் கிரிக்கெட்டில் சதம் என்னும் இமாலய இலக்கை எட்ட முடியும். இந்த நூறு நாட்களில் ஸ்டாலின் அரசு சுழன்றாடிய ஆட்டம் சிக்ஸர்களா? சறுக்கல்களா? நினைத்திருந்தால் கொரோனா இரண்டாம் அலையைக் காரணம் காட்டி செயலற்ற அரசாங்கமாகச் சும்மா அமர்ந்திருக்கலாம் என்றாலும் முதல்வராகப் பதவியேற்பதற்கு முன்பே முதல்வருக்கான பொறுப்புகளை ஏற்றிருந்தார் ஸ்டாலின். தேர்தல் முடிவுகள் வெளியான அடுத்த நாளே, தலைமைச் செயலாளர் - மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளரை வைத்து கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இரண்டு நாள் ஆலோசனையில் மூன்று அறிக்கைகள் வந்தன. மூன்றும் கொரோனா பாதிப்பு கட்டுப்பாடு குறித்து.





















