Madurai DMK Cadre set on fire : திமுக நிர்வாகி பகீர்..MLA வீட்டு முன் தீக்குளிப்பு! பின்னணி என்ன?
திமுகவில் தனக்கு மரியாதை என சொல்லி திமுக நிர்வாகி ஒருவர் திமுக மாவட்ட செயலாளர் கோ தளபதி வீட்டின் முன்பு தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ஆவின் திமுக தொழிற்சங்க கவுரவ தலைவராக பொறுப்பு வகித்து வருபவர் மானகிரி கணேசன். இவர் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக உறுப்பினராக இருக்கிறார். கட்சிப் பணிகளில் தொடர்ந்து ஈடுபாட்டுடன் இருந்தவர் என்று கூறப்படுகிறது. இவர் கடந்த 2023 ஜூன் 28 அன்று, தமிழக ஆளுநரை மாற்ற வலியுறுத்தி சிம்மக்கல்லில் உள்ள கலைஞர் சிலை முன்பாக தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் இதுதொடர்பாக முன்கூட்டியே போஸ்டர் ஒட்டியிருந்தும், மாவட்ட செயலாளர் கோ தளபதி தன்னை அழைத்து எதுவும் பேசாததால் வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஜூலையில் கடிதம் அனுப்பியும் நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தியில் இருந்துள்ளார். இதனை தொடர்ந்து முதலமைச்சருக்கு இந்த மாதம் 2ம் தேதி மீண்டும் கடிதம் அனுப்பிய கணேசன், அதில் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க காலம் தாழ்த்தினால் கலைஞர் சிலை முன்பு தீக்குளிப்பில் ஈடுபடுவேன் என குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில், இன்று காலை பைகரா பகுதியில் உள்ள கோ.தளபதியின் வீட்டிற்கு சென்ற அவர், தளபதிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிக் கொண்டே அவர் வீட்டின் முன்பாகவே தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
தற்போது தீக்காயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக கணேசனின் குடும்பத்தினர் கூறுகையில், ‘ஆளுநரை மாற்றக்கோரி கடந்த ஆண்டு ஜூனில் மதுரையில் கலைஞர் சிலை முன்பு தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட செயலாளர் உள்ளிட்ட கட்சியினர் யாரும் கணேசனை சந்தித்து பேசவில்லை. கட்சிக்காக தீக்குளிக்க துணிந்தும், கட்சியில் தனக்கு உரிய மரியாதை தரப்படவில்லை என்ற காரணத்தால் இப்போது மீண்டும் தீக்குளித்துள்ளார்” என தெரிவித்துள்ளனர்.