Karur BJP Members Join DMK : தட்டித்தூக்கிய செந்தில் பாலாஜி ஷாக்கான அண்ணாமலை ஸ்டாலின் போடும் கணக்கு
தட்டித்தூக்கிய செந்தில் பாலாஜி! ஷாக்கான அண்ணாமலை! ஸ்டாலின் போடும் கணக்கு
அண்ணாமலை லண்டனில் இருக்கும் நேரத்தில் கரூர் பாஜகவினர் 30 பேர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர். இதற்கு பின்னணியில் செந்தில்பாலாஜியின் ப்ளான் 2026 இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூரை திமுகவின் கோட்டையாக வைத்திருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, சிறைக்கு சென்றது திமுகவினருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. சிறையில் இருந்தாலும் கொங்கு மண்டலத்தின் முக்கிய முடிவுகளை செந்தில் பாலாஜியே எடுப்பதாக பேசப்பட்டது. திமுக தலைமையும் அவர் கைகாட்டும் நபர்களையே தேர்தல்களில் நிறுத்துவதற்கு டிக் அடித்தது. நாடாளுமன்ற தேர்தலின் போது சிறையில் இருந்தே கரூரில் ஜோதிமணியையும், கோயம்புத்தூரில் கணபதி ராஜ்குமாரையும் வெற்றி பெற வைத்தார் செந்தில் பாலாஜி. அவர் சிறையில் இருந்து வந்த உடனேயே நடந்த அமைச்சரவை மாற்றத்தில் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஒதுக்கப்பட்டது. செந்தில் பாலாஜி வருவதற்காகவே அமைச்சரவை மாற்றத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தள்ளி போட்டதாகவும் பேச்சு இருந்தது.
அடுத்த சில நாட்களில் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் பதவியும் அவரை தேடிவந்தது. 2026 சட்டப்பேரவை தேர்தலை நோக்கி திமுக பணிகளை முடுக்கி விட்டுள்ளது. தேர்தலுக்காக கொங்கு மண்டலத்தின் மொத்த பொறுப்பையும் செந்தில் பாலாஜி வசம் ஒப்படைக்க ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனால் மற்ற கட்சியின் முக்கிய புள்ளிகளை திமுக பக்கம் கொண்டு வருவதற்கான வேலைகளில் செந்தில் பாலாஜி இறங்கியுள்ளதாக சொல்கின்றனர்.
அந்தவகையில் கரூர் மாவட்ட முன்னாள் இளைஞரணி தலைவர் M.K.கணேசமூர்த்தி மற்றும் 30க்கும் மேற்பட்ட பாஜகவை சேர்ந்த இளைஞர்கள் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர். இதனை தொடர்ந்து அதிமுக, நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களும் திமுகவில் இணைவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக கரூர் திமுக வட்டாரத்தில் சொல்கின்றனர்.
பாஜகவை சேர்ந்தவர்கள், அதிருப்தியில் திமுக பக்கம் சாய்வதாக கூறப்படுகிறது. நீண்ட நாட்களாக பதவிக்காக காத்திருந்து வாய்ப்பு கிடைக்காதவர்கள் அதற்கான வாய்ப்பை திமுக கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து அங்கு இணைவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை லண்டனில் இருக்கும் நேரத்தில் இந்த மாற்றம் நடப்பது முக்கியத்துவம், வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அண்ணாமலை லண்டன் சென்றதும் பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவராக நியமிக்கப்பட்டார் மூத்த தலைவர் ஹெச்.ராஜா. அவர் மாவட்ட அளவில் நிர்வாகிகளை கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு பாஜகவினர் மத்தியில் இருக்கிறது. அந்த அதிருப்தியில் தான் பாஜகவினர் சிலர் திமுகவில் இணையும் முடிவை எடுத்ததாக சொல்கின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூரில் அதிரடி காட்டி வருவது பாஜகவினருக்கு ஷாக்கை கொடுத்துள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.