”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்
அரியணை நோக்கி வருகிறார் கனிமொழி என திமுக மகளிர் அணி வெளியிட்ட ஒற்றை வீடியோ பல்வேறு சந்தேகங்களை கிளப்பிய நிலையில், சமூக வலைதளங்களில் இருந்து அந்த வீடியோ டெலிட் செய்யப்பட்டுள்ளது.
திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழியின் பிறந்தநாளை இன்று திமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். திமுக மகளிர் அணி சார்பில் கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் போஸ்டர்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்தவகையில் நேற்று வெளியிடப்பட்ட வீடியோ ஒன்று திமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதில் கையில் தடியுடன் கனிமொழி இருக்கும் வகையிலும், உதயசூரியனுடன் அய்யா கைத்தடியோடு அரியணை நோக்கி வருகிறார் அக்கா கனிமொழி 2026 என்ற வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.
கனிமொழி மீண்டும் மாநில அரசியலுக்கு வருவதற்கான குறியீடா? முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி மீது கனிமொழிக்கு அதிருப்தியா? கனிமொழியை வைத்து தான் திமுக கூட்டணி அமையப் போகிறதா என பல்வேறு கேள்விகளுடன் சமூக வலைதளங்களில் விவாதம் சூடுபிடித்தது.
ஏற்கனவே மாநில அரசியலும், கட்சியும் உதயநிதிக்கு தான் என கணக்கு போட்டு கனிமொழிக்கு திமுகவின் நாடாளுமன்ற குழு தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டதாக அப்போது விமர்சிக்கப்பட்டது. தேசிய அரசியல் கனிமொழிக்கும், மாநில அரசியல் உதயநிதிக்கும் என ஸ்டாலின் காய்களை நகர்த்துவதாக பேசப்பட்டது. உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி கிடைக்க போவதாக தகவல் வந்த நேரத்தில், மாநில அரசியலுக்கு மீண்டும் வருவது தொடர்பாக கனிமொழியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நான் மாநில அரசியலுக்கு வருவது குறித்து கட்சி முடிவு செய்யும் என முடித்து வைத்தார் கனிமொழி.
இந்தநிலையில் திமுக மகளிர் அணி சார்பில் இப்படி ஒரு வீடியோ வெளியானது கட்சிக்குள்ளேயும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே இளைஞரணிக்கும், மகளிரணிக்கும் அவ்வப்போது புகைச்சல் ஏற்படுவதாக செய்திகள் வருவதுண்டு. இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், திமுக மகளிர் அணி சமூக வலைதள பக்கத்தில் இருந்து வீடியோ டெலிட் செய்யப்பட்டுள்ளது. திமுகவில் தேர்தல் வேலைகள் ஆரம்பமாகியுள்ள நேரத்தில் கனிமொழி பிறந்தநாளையொட்டி நடந்துள்ள இந்த சம்பவம் கட்சிக்குள் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக சொல்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.