Karnataka Accident 17 Dead: அதிகாலையில் சோகம்.! தூக்கத்திலேயே உயிரிழந்த 17 பேர்; கர்நாடகாவில் எரிந்த ஆம்னி பேருந்து
கர்நாடகாவில், அதிகாலையிலேயே நடந்த கோர விபத்தில், கண்டெய்னர் லாரி மோதி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில், 17 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.

கர்நாடகாவில் இன்று அதிகாலை, சித்ரதுர்கா மாவட்டத்தில், தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி, ஸ்லீப்பர் பேருந்து மீது மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் பேருந்து தீப்பிடித்து பயங்கரமாக எரிந்த நிலையில், 17 பேர் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்து
கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள கோரலத்து கிராஸ் அருகே, ஹிரியூரிலிருந்து பெங்களூரு நோக்கி சென்ற லாரி ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் உள்ள தடுப்புகளை(center median) தாண்டி, எதிர்திசையில் வந்த ஒரு தனியார் ஸ்லீப்பர் கோச் பேருந்து மீது மோதியதில், அந்த பேருந்து பயங்கரமாக தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில், பல பயணிகள் பேருந்திற்குள் சிக்கிக் கொண்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தீயணைப்புப் படையினர் விரைந்தனர். பின்னர், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் பலர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
17 பேர் உயிரிழப்பு.?
விபத்தில் உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கை, முழுமையான கணக்கெடுப்புக்குப் பின்புதான் தெரியவரும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் 17 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்கு உத்தரவு
இந்த கோர விபத்தைத் தொடர்ந்து, சித்ரதுர்கா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஞ்சித், சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு, விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பாக, ஹிரியூர் கிராமப்புற காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்துக்கான சரியான காரணத்தை கண்டறிய, தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த விபத்து காரணமாக, பரபரப்பாக காணப்படும் தேசிய நெடுஞ்சாலை 48-ல், பல மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் மற்றும் அவசர காலப் பணியாளர்கள், இடிபாடுகளை அகற்றி, போக்குவரத்தை சீர் செய்யும் பணியை மேற்கொண்டனர். அதிகாலையிலேயே நிகழ்ந்த இந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





















