Haryana BJP : முரண்டு பிடித்த சீனியர்கள் தூக்கியடித்த ஹரியானா பாஜக..குதூகலத்தில் காங்கிரஸ்
ஹரியானவில் பாஜக உட்கட்சி பூசல் உச்சக்கட்டதை எட்டியுள்ள நிலையில், அக்கட்சியில் சில முக்கிய தலைகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் அக்டோபர் ஐந்தாம் தேதி நடைபெற உள்ளது. மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற பாஜகவும் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் தீவிரம் காட்டி வருகின்றன.கடந்த பத்து ஆண்டுகளாக ஹரியானவில் ஆட்சியில் இருக்கும் எப்படியாவது அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆட்சியை பிடிக்க பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. ஆனால் கட்சியில் நிலவி வரும் உட்கட்சி பூசல் பாஜகவை கடுமையாக பாதித்துள்ளது.
இரண்டாவது முறையாக ஆட்சிக்கட்டிலில் இருக்கும் பாஜக மீது ஹரியானா மக்கள் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. இது காங்கிரஸுக்கு சாதகமாக மாறிவிடக்கூடாது என்பதற்காக பாஜக தனது வேட்பாளர்கள் பட்டியலில் சில மாற்றங்களை செய்தது. கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்தவர்களுக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை.
முக்கியமாக முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சிங் சவுதாலா ஆகியோருக்கு சீட் தராதது கட்சிக்குள் அதிருப்தியை கிளப்பியது. இதனால் ரஞ்சித் சிங் சவுதாலா உட்பட 8 முக்கிய புள்ளிகள் சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இவர்களின் வேட்புமனுவை வாபஸ் பெற கட்சி வலியுறுத்திய நிலையில் அதை அதிருப்தி நிர்வாகிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் அவர்கள் அனைவரையும் பாஜக தலைமை அதிரடியாக கட்சியிலிருந்து நீக்கியுள்ளது. இவர்கள் அனைவரும் ஆறு ஆண்டுகள் வரை கட்சியிலிருந்து நீக்கப்பட்டு இருப்பதாகவும் பாஜகவை சேர்ந்த யாரும் அவர்களுடன் தொடர்பில் இருக்கக்கூடாது என்று கட்சி நிரவாகம் கறாக உத்தரவிட்டுள்ளது.
ஆனால் அதிருப்தி நிர்வாகிகள் அனைவரும் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளதால் பாஜகவின் வாக்குகள் சிதற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த உட்கட்சி பூசலினால் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிப்பது சிரமம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.