Erode Bypoll : ஈரோடு இடைத்தேர்தல்! முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! குளிர்காயும் அதிமுக
ஈவிகேஸ் இளங்கோவனுடைய மறைவை அடுத்து ஈரோடு தொகுதி அடுத்து யாருக்கு என்கிற போட்டி காங்கிரஸ் மற்றும் திமுகவுக்கு இடையே உருவாக்கி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் ஈரோடு சட்டமன்ற தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா காங்கிரஸ் சார்பில் நின்று வெற்றி பெற்றார். கடந்த 2023 ஆம் ஆண்டு திருமகன் ஈவேரா மாரடைப்பு ஏற்பட்டு காலமானதை அடுத்து ஈரோடு தொகுதி காலி தொகுதியாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அப்போதே அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது மீண்டும் ஒரு காங்கிரஸ் வேட்பாளரையே நிறுத்தலமா இல்லை திமுக வேட்பாளரை நிறுத்தலமா என்ற பிரச்னை எழுந்தது. பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு அங்கு காங்கிரஸின் மூத்த நிர்வாகியான திருமகன் ஈவேராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார்.அவரை வேட்பாளராக நிறுத்தியபோது வயதுமூப்பு காரணமாக அவர் அதை மறுத்தார். இந்நிலையில் ஆட்சிக்காலம் நிறைவடையாமலே தற்போது உடல்நலக்குறைவால் ஈவிகேஎஸ் காலமானார். இந்நிலையில் மீண்டும் அதே தொகுதியில் ஒரே ஆட்சியில் இரண்டாவது இடைத்தேர்தல் வைக்கவேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.
இதையடுத்து தான் துவங்கியது பூகம்பம். ஏற்கனவே கடந்த இடைத்தேர்தலின் போது அங்கு ஈவிகேஎஸ் க்கு பதிலாக திமுக மாவட்ட செயலாளர் முத்துசாமியை களமிறக்க திமுக தொண்டர்கள் காய்நகர்த்தினர். அதே சமயம் அந்த தொகுதியில் தற்போது காங்கிரஸிலும் பெயர் சொல்லும் அளவிலான தலைவர் இல்லை.இதையே ப்ளஸாக கருதி மீண்டும் திமுக வேட்பாளரையே களமிறக்க ஆர்வம் காட்டுகிறது திமுக.
ஏற்கனவே கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்பதை தகர்த்தெறியும் நோக்கில் உள்ள திமுக கடந்த இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல், மக்களவை தேர்தல் என அனைத்திலும் மெகா வெற்றி பெற்றது. அதற்காக டிஆர்பி ராஜா உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களை கொங்கு மண்டலத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமித்து ஸ்கோர் செய்தது.
இந்த முறை செந்தில் பாலாஜியும் வெளியே வந்துவிட்டார். மேலும் கொங்கு மண்டலம் முதல்வர் ஸ்டாலினுக்கு மட்டுமின்றி துணை முதல்வரின் டார்கெட்டாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே எப்படியாவது இந்த முறை ஈரோட்டில் திமுக வேட்பாளரை நிறுத்தி மீண்டும் மெகா வெற்றி பெற்று அதிமுகவை ஆட்டம் காண வைக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளது.
ஆனால் இதற்கு காங்கிரஸ் தலைமை உடன்படுமா என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது. ஏனெனில் காங்கிரஸின் முக்கிய தொகுதியில் ஒன்றான ஈரோட்டை கைவிட காங்கிரஸ் விரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் தலைமையிடம் திமுக தலைமை வரும் 2026 தேர்தலை வைத்து டீல் பேசவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதே சமயம் விக்கிரவாண்டி தேர்தலை புறக்கணித்தது போல அதிமுக வால் இந்த தேர்தலை புறக்கணிப்பது அத்தனை எளிதல்ல. ஏனெனில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு ட்ரையலாக இந்த தேர்தலை சந்தித்து மக்களின் மனநிலையில் கணிக்கலாம். எனினும் முகம் தெரியாத காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிட்டால் அது அதிமுகவுக்கு ப்ளஸ்ஸாக அமையவும் வாய்ப்புள்ளது.
இந்நிலையில் இன்னும் 1 வருடம் 5 மாத ஆட்சிக்காலம் உள்ள நிலையில், ஈரோடு இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுமா இல்ல காங்கிரஸே மீண்டும் போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.