DMK BJP : ”பாஜகவை வளர்க்கும் திமுக” ஸ்டாலின் ரகசிய கூட்டணி? அச்சத்தில் அதிமுக
கலைஞர் நாணய வெளியீட்டுக்கு பாஜகவினரை அழைத்தது, வானதி சீனிவாசன் முதலமைச்சரை நேரில் சந்தித்ததை வைத்து எதிர்க்கட்சி அந்தஸ்தில் அதிமுகவை ஓரங்கட்டி பாஜகவை திமுக வளர்க்கிறதா என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சு ஆரம்பமாகியுள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாணயத்தை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டது மற்றும் இந்த நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் ஸ்டாலினே பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு போன் போட்டு அழைத்தது இதையெல்லாம் வைத்து அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக, பாஜக ரகசிய உறவு என்ற குற்றச்சாட்டை கையில் எடுத்து விமர்சித்து வருகிறார் எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ். ஆனால் திமுக, பாஜக தரப்பில் இருந்து இதற்கு மறுப்பு குரலே வருகிறது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் முதலமைச்சரை நேரில் சந்தித்தது கவனத்தை ஈர்த்தது. கோவை தொகுதி பிரச்னைகள் பற்றி முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும், சில கோரிக்கைகளை வைத்துள்ளதாகவும் கூறினார் வானதி சீனிவாசன். மேலும் கூட்டணியெல்லாம் இல்லை, நாங்கள் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுகிறோம் என்றார்.
வானதி சீனிவாசன் முதல்வரை சந்திப்பதற்கு முன்னரே நேரம் கேட்டிருந்ததாகவும், அப்போது நேரம் ஒதுக்க முடியவில்லை என்பதால் ஆகஸ்ட் 20ம் தேதி சந்திப்பு நடந்ததாகவும் கூறுகின்றனர். நாணய வெளியீட்டு விழா விவாதத்திற்கு நடுவில் நேரம் ஒதுக்கியுள்ளதை வைத்து பாஜகவை திமுக எதிர்க்கட்சியாக வளர்க்க பார்க்கிறதா என அதிமுக வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும் பேச்சு இருக்கிறது. எதிர்க்கட்சி தலைவரான இபிஎஸ் இதுவரை முதலமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கைகள் எதுவும் வைக்கவில்லை. அதனால் பாஜக முதலமைச்சரை சந்திப்பதன் மூலம் தன்னை எதிர்க்கட்சி அந்தஸ்தில் முன்னிறுத்திக் கொள்ளப் பார்க்கிறதா என்ற விவாதம் சென்று கொண்டிருக்கிறது.
திமுகவை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வந்த பாஜகவுடன் திமுகவும் இணக்கமான ஒரு சூழலை உருவாக்கிக் கொள்ள முயல்கிறதன் பின்னணியில் தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்களை பெறுவதுதான் ப்ளான் என்று திமுக தரப்பில் இருந்து தகவல்கள் கிடைக்கின்றன. அதே நேரத்தில் அதிமுகவை எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருந்து ஓரங்கட்டவே இந்த வேலைகள் நடந்து வருவதாகவும் அதிமுகவிலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.