CRPF MunirAhmed: பாக்.,பெண்ணுடன் திருமணம்!சிக்கலில் தவிக்கும் CRPF வீரர்! மத்திய அரசு அதிரடி முடிவு
பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்ததை மறைத்ததற்காகவும், அவரது விசா காலம் முடிந்து இந்தியாவிலேயே தங்க வைத்ததற்காகவும் சிஆர்பிஎப் வீரர் முனீர் அஹமது பணி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் கொடூர
தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்கள் அனைவரும் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று இந்திய அரசு உத்தரவிட்டது. பாகிஸ்தானியர்கள் பலரும் இந்தியாவை விட்டு வெளியேறினர்.
முன்னதாக ஜம்மு காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரராக பணியாற்றும் முனீர் அஹமது என்ற நபர் கடந்த ஆண்டு மே மாதம் பாகிஸ்தானைச் சேர்ந்த மேனால் கான் என்ற பெண்ணை ஆன்லைன் வாயிலாக திருமணம் செய்து கொண்டார். பாகிஸ்தானை சேர்ந்தவரை திருமணம் செய்ய அனுமதி கேட்டு விண்ணப்பித்தாலும், அதிகாரிகள் முடிவு செய்வதற்கு முன்னரே அவர் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் தகவல் தெரிவிக்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து மேனால் கான் இந்தியா விசா பெற்று காஷ்மீரின் முனீர் அஹமதுவுடன் வசிக்க துவங்கினார்.
ஆனால், விசா காலம் முடிந்த பிறகும் அவர் நாட்டை விட்டு வெளியேறவில்லை. இச்சூழலில் தான் பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இவரை நாடுகடத்தும் முனைப்பில் இந்திய அரசு இறங்கியது. ஆனால் காஷ்மீர் நீதிமன்றம் தடைவிதிக்கவே அவர் மீண்டும் காஷ்மீரிலே வசித்து வருகிறார். இதனிடையே முனீர் அஹமதுக்கு எதிராக சிஆர்பிஎப் அதிகாரிகள் துறை ரீதியிலான விசாரணையை மேற்க்கொண்டனர். விசாரணையின் முடிவில் பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்தது மற்றும் இந்தியாவில் நீண்ட நாட்களாக இருந்ததை மறைத்துள்ளார் என்று கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, முனீர் அஹமதுவின் நடவடிக்கைகள் சிஆர்பிஎப் விதிகளுக்கு எதிராக இருக்கிறது என்று பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.





















