PM Candidate | I.N.D.I.A பிரதமர் வேட்பாளர்?காங்கிரசின் பக்கா ப்ளான் பிரியங்காவை வைத்து ஸ்கெட்ச்
வாக்குப்பதிவு நெருங்கிவிட்ட நிலையில், இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் காங்கிரஸ் சில முக்கிய நபர்களை தேர்வு செய்து ரெடியாக இருப்பதாக கூறப்படுகிறது. பிரியங்கா காந்தி தேர்தலில் களமிறங்காததன் பின்னணியிலும் காங்கிரஸின் பக்கா ப்ளான் இருப்பதாக கட்சி வட்டாரத்தில் பேச்சு இருக்கிறது.
மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க பாஜக மும்முரம் காட்டி வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகின்றன. பாஜக கூட்டணி சார்பாக பிரதமர் வேட்பாளர் முகமாக பிரதமர் மோடி இருக்கும் நிலையில், இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளரை அறிவிப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்துவிட்டதாக மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ஏற்கனவே கூறியிருந்தார்.
இந்தநிலையில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் காங்கிரஸ் சில ஆப்ஷன்களை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் கூட்டணியில் இருக்கும் கட்சிகள். தலித் தலைவராக இருப்பதாலும், காங்கிரஸின் மூத்த தலைவராக இருப்பதாலும் கார்கேவை முன்னிறுத்தினால் பலமா இருக்கும் என காங்கிரஸ் கணக்கு போட்டுள்ளது. கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் எந்த மறுப்பும் சொல்லாமல் அதற்கு ஒத்து வருவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த ஆண்டு இந்தியா கூட்டணி கூட்டத்தில் கார்கேவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் முன்மொழிந்திருந்தனர். தற்போது மம்தா தனித்து களமிறங்கியது, பஞ்சாபில் ஆம் ஆத்மியுடன் மோதல் என காங்கிரஸுக்கு சில சிக்கல் இருக்கும் சூழலில் கார்கேவை கொண்டுவந்தால் அதற்கு முடிவு கிடைக்கும் என கூறப்படுகிறது.
அதேநேரத்தில் அதிக தொகுதிகளில் வெற்றிபெற்று விட்டால் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. தொண்டர்களின் விருப்பத்திற்காக ராகுல்காந்தி களமிறங்க வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
பாஜகவுக்கு செக் வைக்கவே பிரியங்கா காந்தி தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் கூறப்படுகிறது. ரேபரேலி தொகுதியில் சோனியா காந்திக்கு பதிலாக பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராகுல்காந்தியை களமிறக்கி ட்விஸ்ட் வைத்தது காங்கிரஸ். வாரிசு அரசியலை ஆயுதமாக வைத்து பாஜக பிரச்சாரம் செய்யக் கூடாது என்பதற்காக இந்த முடிவெடுத்ததாக சொல்லப்படுகிறது. மேலும் பிரியங்கா காந்தியின் பேச்சு தேசிய அளவில் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருப்பதால், நாடு முழுவதும் பிரச்சாரம் செய்வதற்காக அவரை தேர்தலில் களமிறக்கவில்லை என்றும் பேச்சு இருக்கிறது. இப்படி தேர்தலுக்கு முன், பின் என பக்கா ப்ளானுடன் காங்கிரஸ் காய் நகர்த்தி வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு இருக்கிறது.