Yogi Adityanath vs Maurya : யோகி ஆதித்யநாத் vs மெளரியா.. உச்சகட்ட மோதலில் உ.பி பாஜக! நடப்பது என்ன?
உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் துணை முதலமைச்சர் இடையேயான மோதல் உச்சத்தை தொட்ட நிலையில் சமாஜ் வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் வெளியிட்ட அறிவிப்பு உத்தரபிரதேச பாஜகவினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்த பாஜக மக்களவையில் பெரும்பான்மை பெற தவறியது. குறிப்பாக பெரிதும் எதிர்பார்த்து இருந்த உத்தரபிரதேச மாநில மக்கள் பாஜகவுக்கு ஏமாற்றத்தையே பரிசளித்தனர். மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பாஜகவுக்கு 33 தொகுதிளே கிடைத்தன. தோல்விக்கான காரணம் குறித்து மாநில பாஜக தலைவர்கள் லக்னோவில் சந்தித்து விவாதித்தனர்.அப்போது முதலமைச்சர் ஆதித்யநாத்தின் செயல்பாடுகள் தான் தோல்விக்கு காரணம் என செயற்குழு நிர்வாகிகள் குற்றம் சாட்டினர்.
குறிப்பாக துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியா வெளிப்படையாகவே அதிருப்தி தெரிவித்தார். அரசாங்கத்தை விட கட்சியே பெரியது என்றும் கட்சியை விட யாரும் பெரியவர்கள் இல்லை என்றும் விமர்சித்த அவர் கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களை ஏற்காமல் உயர் பதவியில் உள்ளவர்கள் தனித்து செயலாற்றுவதே தோல்விக்கு காரணம் என ஆதித்யநாத் மீது குற்றம் சாட்டி இருந்தார். முதலில் தான் ஒரு பாஜக தொண்டன் பின்னர் தான் துணை முதல்வர் என்று கேசவ் பிரசாத் மௌரியா பேச்சு முதல்வர் ஆதித்யநாத் உடனான விரிசல்களை தெளிவாக காட்டும் விதமாக இருந்தது.
இந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் விரைவில் 10 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைப்பெற உள்ளது. தற்போது அங்கு நடந்து வரும் உட்கட்சி பூசல் பாஜக தலைமைக்கு தலைவலியாக மாறி வருகிறது.
இடைத்தேர்தலுக்கு தயாராகும் வகையில் முதல்வர் யோகி ஆதித்ய்நாத் நடத்திய கூட்டத்தில் மெளரியா மற்றும் அவரது ஆத்ரவாளர்கள் யாரும் கலந்துகொள்ள்வில்லை, மேலும் பாஜக கூட்டணி கட்சிகளும் யோகி அரசுக்கு எதிராக கேள்விகளை கேட்க தொடங்கியுள்ளனர்.
பாஜகவில் நடக்கும் இந்த சண்டைகள் குறித்து சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் அடிக்கடி தனது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். பாஜகாவில் சேர்ந்தவர்கள் நாற்காலிக்காக சண்டை போட்டு வருகிறார்கள், அவர்களுக்கு
மக்கள் மீது கொஞ்சம் அக்கறை கிடையாது, மேலும் அகிலேஷ்
யாதவ் தனது எக்ஸ் பதிவில் மறைமுகமாக பாஜக எம்.எல்.ஏ.களுக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்திருப்பது பாஜகவுக்கு அச்சத்தை கொடுத்திருக்கிறது.
அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ள அந்த பதிவில் monsoon offer: bring a hundred, form a government என்று பதிவிட்டிருக்கிறார், அதாவது இன்னும் 100 எம்.எல்.ஏ-க்கள் இருந்தால் புதிய அரசை உருவாக்கிவிடலாம் என்று பாஜக எம்.எல்.ஏ-க்களை அவர் மறைமுகமாக அழைத்திருப்பதாக அங்குள்ள ஊடகங்கள் அகிலேஷின் பதிவை தலைப்பு செய்தியாக மாற்றி வருகிறது.
ஏற்கெனவே கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு, உட்கட்சி பூசல் ஆகியவை யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக திரும்பி வரும் நிலையில் உத்தரபிரதேச முதல்வராகவ் அவர் தொடர்வாரா என்றா கேள்வி எழும்பியுள்ளது. ஆனால் பிரதமர் மோடிக்கு பிறகு பாஜக தொண்டர்களின் மத்தியில் அதிக செல்வாக்கு உடையவராக யோகி இருப்பதால் அவரை பதவியிலிருந்து நீக்குவது என்பது
அது பாஜகவுக்கு பின்னடைவாக அமையும் என்று கூறப்படுகிறது.
ஆனாலும் இடைத்தேர்தலுக்கு பிறகு உத்தர பிரதேச பாஜகவில் பல்வேறு மாற்றங்கள் வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது, இதனால் வரும் காலங்களில் ஆட்சியை காப்பாற்ற பாஜகவின் அடுத்தக்கட்ட நகர்வுகள் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்