Champai Soren Joins BJP : INDIA-வின் முதல் விக்கெட்!சம்பாய் சோரன் அந்தர்பல்டிபாஜக பலே திட்டம்
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் இருந்து விலகிய நிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்துள்ளார். சம்பாய் சோரனின் இந்த முடிவு ஐஎண்டிஐஏ கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
ஜார்க்கண்ட் தனி மாநிலமாக உருவாகி 24 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை ஒரு முதல்வர் கூட அங்கு 5 ஆண்டுகளுக்கு முழுமையாக ஆட்சி அமைக்கவில்லை. இந்த வரலாற்றை 2019ல் முதல்வரான ஹேமந்த் சோரன் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதன் காரணமாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவரது மனைவி கல்பனா சோரன் முதல்வர் பதவிக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜே.எம்.எம் கட்சியின் மூத்த தலைவரும், மாநில அமைச்சருமான சம்பாய் சோரன் முதல்வராக்கப்பட்டார்.
ஹேமந்த் சோரன் சிறையில் இருந்தபோது நடைபெற்ற 2024 மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 14 தொகுதிகளில், எட்டு தொகுதிகளில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற்றாலும், 2019 தேர்தலுடன் ஒப்பிடுகையில் பா.ஜ.க மூன்று தொகுதிகளை இழந்தது. குறிப்பாக, பழங்குடியினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட ‘கொல்ஹான்’ பிராந்தியத்தில் உள்ள ஐந்து தொகுதிகளிலும் ஜே.எம்.எம் - காங்கிரஸ் கூட்டணி ஒட்டுமொத்தமாக ஜெயித்தது. இது, பா.ஜ.க-வுக்குப் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. கொல்ஹானில் ஜெ எம் எம் வெற்றிக்கு பெரும் பலமாக இருந்தது சம்பாய் சோரனின் செல்வாக்கு தான். அவர் கொல்ஹான் டைகர் என்று அழைக்கப்படும் அளவிற்கு அந்த பகுதியை தன் வசம் வைத்துள்ளார்.
ஹேமந்த் சோரன் சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில் மீண்டும் முதல்வரானார். சம்பாய் சோரனின் ஆட்சிக்காலம் முடிவடைந்தது. இந்நிலையில் சம்பாய் சோரன் தனது ஆட்சிக்காலத்தில் கட்சி தலைமை தன்னை அவமதித்ததாக சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும் கட்சியின் மீதுள்ள அதிருப்தி காரணமாக அவர் விரைவில் புதிய கட்சி ஒன்றை தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் அமித்ஷாவுடன் சம்பாய் சோரன் ஆலோசனை நடத்தும் புகைப்படமும் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியதுபின்னர் அவர் பாஜகவில் இணையவுள்ளார் என்பதை அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா அறிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி சம்பாய் சோரன் ஜே எம் எம் இல் இருந்து விலகி அனைத்து கட்சி பதவிகளையும் ராஜினாமா செய்தார். இந்நிலையில் இன்று அவர் அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்துள்ளார்,
இதுகுறித்து சம்பாய் சோரன் தெரிவித்துள்ளதாவது, பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் புதிய கட்சி தொடங்குவதே தனது நோக்கமாய் இருந்த நிலையில் சரியான கூட்டாளி அமைந்ததால் ஜார்க்கண்டின் வளர்ச்சிக்கு உதவும் நோக்கில் தான் பாஜகவில் இணைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்
இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் ஜெ எம் எம் ஐ வீழ்த்தி எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது பாஜக.
ஜார்க்கண்ட் வெற்றியை தீர்மானிக்கு கொல்ஹான் பிராந்தியம் சம்பாய் சோரனின் கையில் உள்ளதால் இந்த தேர்தல் ஹேமந்த் தரப்புக்கு சாதகமாக இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.