”முன்கூட்டியே எச்சரித்தேன்! கேரள அரசு கண்டுக்கல!” அமித்ஷா ஆவேசம்!
நிலச்சரிவு ஏற்படப் போகிறது என கேரளாவுக்கு முன்கூட்டியே எச்சரித்தும் கேரள அரசு கண்டுகொள்ளாமல் இருந்தது ஏன் என ஆவேசமாக பேசியுள்ளார் அமைச்சர் அமித்ஷா.
கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு, ஒட்டுமொத்த நாட்டையுமே சோகத்தில் மூழ்கடித்துள்ளது. இந்த நிலச்சரிவு காரணமாக இதுவரை 160க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர். நூற்றுக்கணக்கான நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், நிலச்சரிவில் சிக்கிய 200-க்கு மேற்பட்டோர் பேரின் நிலை என்னவென்று தெரியாமல் உள்ளது.
அதிகாலையிலேயே அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவால் ஏராளமானோரின் உயிர் பறிபோயுள்ளது. மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. ஆனால் இந்த நிலச்சரிவு தொடர்பாக ஜூலை 23ம் தேதியே எச்சரிக்கப்பட்டதாக அமைச்சர் அமித்ஷா கூறியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.
இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய அவர், ‘முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக கணக்கிடப்பட்டு எனது உத்தரவின்பேரில் ஜூலை 23ம் தேதி 9 NDRF குழுக்கள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதுதொடர்பாக கேரள அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது. கேரள அரசு என்ன செய்தது? மக்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றினார்களா? அப்படி அவர்கள் மாற்றப்பட்டிருந்தால் எப்படி உயிரிழப்புகள் ஏற்பட்டன? முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் திட்டம் 2016ல் தொடங்கப்பட்டது. 2023 க்குள், இந்தியாவில் மிக நவீன முன்னறிவிப்பு சிஸ்டம் உருவானது. இயற்கை பேரழிவுகள் குறித்த எச்சரிக்கையை ஏழு நாட்களுக்கு முன்பே வழங்கக்கூடிய சிஸ்டம் 4 நாடுகளில் மட்டுமே உள்ளது. அதில் இந்தியாவும் ஒன்று” என கூறியுள்ளார்.
மேலும் கேரள அரசு எச்சரிக்கையாக இருந்திருந்தால், நிலச்சரிவுகளால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைத்திருக்கலாம். வயநாடு பேரிடரை சமாளிக்க கேரள அரசு மற்றும் மக்களுடன் பாறை போல் துணை நிற்கிறது மோடி அரசு என கூறினார் அமித்ஷா.
அமித்ஷாவின் பேச்சு தேசிய அளவில் விவாதமாக மாறியுள்ளது. மத்திய அரசு முன்கூட்டியே அறிவித்திருந்தால் கேரள அரசின் அலட்சியத்தால் தான் இந்த கோர சம்பவம் நடந்துள்ளதா என்று விவாதிக்கப்பட்டு வருகிறது.