SCHOOL BUS-ஐ மறித்த 3 பேர் கண்ணாடியில் கல் வீசி தாக்குதல் அலறி கத்திய மாணவர்கள் பரபரக்கும் வீடியோ காட்சி | Mayiladuthurai School Van Attack
பள்ளி பேருந்தின் கண்ணாடியில் கல் வீசி தாக்கியதால் பயந்து போய் அலறிய மாணவர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தல் கிராமத்தை அடுத்த அரசலங்குடி கிராமத்தில் பள்ளி மினிபஸ் ஒன்று மாணவர்களை இறக்கி விடுவதற்காக நேற்று மாலை சென்றுள்ளது. அப்போது பேருந்தை வழிமறித்த இளைஞர்கள் மூவர் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பேருந்தின் கண்ணாடியில் கல் வீசி தாக்கியுள்ளனர். கைகளால் கண்ணாடியை அடித்தும், பஸ்சீன் வைபர்களை உடைத்து மிரட்டியுள்ளனர். இதனால் பேருந்தின் உள்ளே அமர்ந்திருந்த பள்ளி மாணவர்கள் பயந்து போய் அலறினர். சிறிது நேரம் அட்ராசிட்டியில் ஈடுபட்ட அந்த இளைஞர்கள் பின்னர் தாங்களாகவே அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதுபோன்று குற்றசெயல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இச்சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகத்தினர் பொறையார் காவல்நியைத்தில் புகார் அளித்துள்ளனர். காரைக்கால் மாவட்டம் பூவம் அருகே சந்திரப்பாடி செல்லும் வழியில் உள்ள பள்ளியில் இருந்து மாலை பள்ளி மினி பஸ்சில் எல்.கே.ஜி முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் 25க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிகொண்டு பேருந்து அரசங்குடி எடுத்துக்கட்டி செல்லும் வழியில் மாங்குடி என்ற இடத்தில் சென்றபோது அட்ராசிட்டியில் ஈடுபட்டு போதை இளைஞர்கள் பேருந்து மீது தாக்குதல் நடத்தியது தெரிய வந்தது. அப்பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் டிவிஎஸ் எக்ஸ்சல் வண்டியை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு வயலுக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தபோது வாகனம் கீழே சாய்ந்து கிடந்துள்ளது. அப்போது அங்கு போதையில் நின்றுகொண்டிருந்த இளைஞர்களிடம் வாகனத்தை யார் தள்ளிவிட்டது என்று செல்வராஜ் கேட்டதால் இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் வந்த தனியார் பள்ளியின் மினிபேருந்து ஹாரன் அடித்ததால் பள்ளி.வேனை அடித்து வைபரை உடைத்து கண்ணாடியை கைகளால் அடித்து இளைஞர்கள் மிரட்டியது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தில் ஈடுபட்டது எடுத்துக்கட்டி காளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் என்பது தெரியவந்த நிலையில் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.





















