Helicopter brothers Arrested : சுருட்டி பறக்க திட்டமிட்ட ‛ஹெலிகாப்டர்’ பிரதர்ஸ் அரெஸ்ட்! Kumbakonam
கும்பகோணத்தில் நிதி நிறுவனம் மூலம் கோடிக்கணக்கில் பணத்தை மோசடி செய்ததாக போஸ்டர்கள் ஒட்டப்பட்ட நிலையில், தொழிலதிபர்கள் உள்ளிட்ட 5 பேர் மீது மூன்று பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்து, நிதி நிறுவன பொது மேலாளரை காவல் துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், ஸ்ரீநகர் காலனி, தீட்சிதர் தோட்டம் தெருவைச் சேர்ந்தவர்கள் எம்.ஆர்.கணேஷ்-எம்.ஆர்.சுவாமிநாதன் சகோதரர்கள். இருவரும் தொழிலதிபர்கள்.
இவர்கள் கும்பகோணத்தில் தனியார் நிதி நிறுவனத்தையும், கொற்கை கிராமத்தில் பால் பண்ணை மற்றும் வெளிநாடுகளிளிலும் பல தொழில்கள் செய்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சொந்தமாக ஹெலிகாப்டர் தளம் அமைத்து, ஹெலிகாப்டர் ஒன்றை வைத்துள்ளதாலும், `ஹெலிகாப்டர் பிரதர்ஸ் என அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் பாஜக பிரமுகர்களுடன் நெருங்கிய நட்பு என தங்களை பிரமாண்டமாக அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர். மேலும், எம்.ஆர்.கணேஷ் பாஜகவின் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட வார்த்த பிரிவு தலைவராகவும் பொறுப்பு வகித்தார். இந்நிலையில், இவர்களுக்கு சொந்தமான நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஒரு ஆண்டில் இரட்டிப்பாகப் பணம் திருப்பி அளிக்கப்படும் என அறிவித்து, கும்பகோணம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்த செல்வந்தர்கள், வர்த்தகர்கள், பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் வசூல் செய்துள்ளனர். இதற்காக ஏஜென்ட்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு தனி கமிஷன் கொடுத்து வந்தனர். இதில் பலரும் கோடிக்கணக்கில் பணம்செலுத்திய நிலையில், கொரோனா ஊரடங்கை காரணத்தை காட்டிய கணேஷ் – சுவாமிநாதன் சகோதர்கள், பணத்தை செலுத்தியவர்களிடம் முறையாக வழங்கவில்லை என குற்றசாட்டு எழுந்தது. இந்நிலையில் கும்பகோணத்தை சேர்ந்த ஜபருல்லா - பைரோஜ் பானு தம்பதியினர், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சயிடம் கடந்த வாரம், கணேஷ்– சுவாமிநாதன் சுமார் ரூ.15 கோடி வரை ஏமாற்றி விட்டதாக புகார் அளித்தனர்.
பைரோஜ்பானு கொடுத்த புகாரில் மாவட்ட குற்றப் பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கும்பகோணம் முழுவதும் ஹெலிகாப்டர் பிரதர்ஸ் 600 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் போஸ்டர் ஒட்டியவர்கள் யார் எனக் குறிப்பிடாமல் `பாதிக்கப்பட்டவர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள்’ எனப் பொதுவாகக் குறிப்பிட்டு, `தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளனர். போஸ்டர் ஒட்டியவர்கள் யார் என போலீஸ் தரப்பில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து பாஜக தஞ்சாவூர் வடக்கு மாவட்ட தலைவர் சதீஷ்குமார், நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், எம்.ஆர்.கணேஷ் மீது சில புகார்கள் வருவதால், அவரை தஞ்சாவூர் வடக்கு மாவட்ட வார்த்க பிரிவு தலைவர் பதவியில் இருந்து விடுவிப்பத்தாக அறிவித்துள்ளார். தொடர் புகாரை அடுத்து தஞ்சாவூர் சரக டிஐஜி பிரவேஷ்குமார் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர், நேற்றுமுன்தினம் இரவு எம்.ஆர். கணேஷ் – சுவாமிநாதன் நிறுவனத்தில் பணியாற்றும் மேலாளர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும், நேற்று காலை கணேஷ் வீட்டில் காவல் துறையினர் சோதனை நடத்தினர். இந்நிலையில் நேற்று கணேஷ், சுவாமிநாதன், நிதி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ரகுநாதன், மீரா, ஸ்ரீதர் ஆகியோர் மீது 120 பி, 406, 420 ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். மேலும் நிதி நிறுவனத்தில் பொது மேலாளராக பணியாற்றும் ஸ்ரீகாந்த் (56) என்பவரை நேற்று மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
கும்பகோணம் பகுதியில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வந்து பல நபர்களை ஏமாற்றிய ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட மக்களிடம் செலுத்திய பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும் என பாதிக்கப்பட்ட நபர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதே நேரத்தில் கும்பகோணம் முழுவதும் ஹெலிகாப்டர் சகோதரர்களுக்கு எதிராக போஸ்டர் ஓட்டியது மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.