Priyanka Gandhi Wayanad : வடக்கில் ராகுல்..தெற்கில் பிரியங்கா! காங்கிரஸ் போடும் கணக்கு
வடக்கில் ராகுல்காந்தி, தெற்கில் பிரியங்கா காந்தி என கணக்கு போட்டு பக்கா ப்ளானுடன் காங்கிரஸ் களமிறங்கியுள்ளது. பிரியங்கா காந்தியை வயநாட்டில் களமிறக்கியுள்ளதன் பின்னணியில் சில முக்கிய காரணங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
மக்களவை தேர்தலில் உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலும், கேரளாவின் வயநாடு தொகுதியிலும் களமிறங்கிய ராகுல்காந்தி, 2 தொகுதிகளிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தினார்.
ஒரே நேரத்தில் இரண்டு தொகுதி எம்.பியாக இருக்க முடியாது என்பதால் வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராஜினாமா செய்வதாக முடிவெடுத்தார் ராகுல்காந்தி. இது கேரள காங்கிரஸ் வட்டாரத்தில் அதிருப்தியை ஏற்படுத்தினாலும் அதற்கு அடுத்து வந்த அறிவுப்பு காங்கிரஸ் கட்சியினரை உற்சாகப்படுத்தியது. வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டிக்கு வந்துள்ளார்.
பிரியங்கா காந்தி தேர்தல் அரசியலுக்கு வருவது இதுவே முதல்முறை. பிரச்சாரம், கட்சி நிகழ்வுகள் என கட்சி ரீதியாக பம்பரமாக சுழன்று வேலை பார்த்து வருகிறார் பிரியங்கா காந்தி. தேர்தல் சமயத்தில் பிரியங்கா காந்தியின் பிரச்சாரம் தேசிய அளவில் காங்கிரஸுக்கு கை கொடுத்தது. ரேபரேலி தொகுதியில் சோனியா காந்திக்கு பதில் பிரியங்கா காந்திதான் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதியில் ராகுல்காந்தி போட்டியிட்டார். வாரிசு அரசியல் என பாஜகவினர் பிரச்சாரம் செய்ய வாய்ப்புள்ளதால் பிரியங்கா காந்தியை தேர்தலில் நிறுத்தாமல் தவிர்த்ததாக கூறப்பட்டது.
தற்போது வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தியை களமிறக்கி தெற்கில் காங்கிரஸுக்கு சாதகமான சூழலை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இந்த தேர்தலில் காங்கிரஸின் செல்வாக்கு அதிகரித்துள்ளதால், ராகுல்காந்தியை வைத்து வடக்கில் கொடிகட்டப் பறக்க திட்டமிட்டுள்ளது காங்கிரஸ்.
தெற்கில் பாஜகவுக்கு எதிராக இருக்கக் கூடிய சூழ்நிலையை காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. தமிழ்நாட்டிலும் காங்கிரஸை உள்ளிடக்கிய கூட்டணி வலுவாக இருக்கிறது. அதனால் தெற்கில் பிரியங்கா காந்தியை களமிறக்கி தேசிய அரசியலில் தெற்கை காங்கிரஸின் கோட்டையாக மாற்ற டார்கெட் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. வயநாடு தொகுதி ராகுல்காந்தி ஏற்கனவே 2 முறை வெற்றி பெற்ற தொகுதி என்பதால் பிரியங்காவின் வெற்றி வாய்ப்பும் பிரகாசமாக இருக்கிறது.