DMK Vs TVK | "திமுகவுக்கு தைரியம் இருக்கா? 75 வருஷம் ஆகியும் சாதிக்கல" விஜய் SKETCH...EPS HAPPY
விஜயின் தமிழக வெற்றிக் கழகம் மாநில அரசியலில் வேகமெடுத்து வரும் நிலையில் விசிக திருமாவளவனை கொண்டு விஜய் காய் நகர்த்தி திமுக கூட்டணியை உடைக்க முயற்சிப்பதாக தெரிகிறது. இந்தநிலையில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரலாற்றில் கூட்டணி இல்லாமல் இதுவரை திமுக ஆட்சி அமைத்ததே இல்லை கட்சிக்கு 75 வயசு, ஆனாலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத திமுகவுக்கு தற்போது 200 தொகுதிகள் சாத்தியமா? என கேள்வி எழுந்துள்ளது.
இன்னல்கள் பல கடந்து, 75 வருடங்களையும் தாண்டி திமுக தற்போது மீண்டும், தமிழ்நாட்டில் ஆளுங்கட்சி அரியணையில் அமர்ந்துள்ளது. அண்ணாதுரை தொடங்கி, கருணாநிதியை தொடர்ந்து தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் தலைவராக அந்த கட்சியை வழிநடத்தி வருகிறார். தமிழக அரசியலை திமுக இன்றி எழுதிவிடவே முடியாது என்ற அளவிற்கு அக்கட்சி முக்கிய பங்காற்றியுள்ளது. இந்நிலையில் தான், வரும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 200 இடங்களை கைப்பற்றும் என அக்கட்சியினர் முழக்கமிட்டு வருகின்றனர். அதேநேரம், என்னதான் பழம்பெரும் கட்சியாக இருந்தாலும் திமுக இதுவரை ஒருமுறை கூட கூட்டணி கட்சிகளின் ஆதரவு இன்றி ஆட்சி அமைத்ததே இல்லை என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
திமுகவில் இருந்து பிரிந்த பிறகு அதிமுக எனும் புதிய கட்சியை தொடங்கிய, எம்.ஜி.ஆர்., மூன்று சட்டமன்ற தேர்தல்களை எதிர்கொண்டு மூன்றிலும் வெற்றி பெற்று அடுத்தடுத்து முதலமைச்சரானார். ஆனால் பெற்றி பெற அவருக்கும் கூட்டணி கட்சிகளின் ஆதரவு தேவைப்பட்டது. வேறு வேறு சின்னங்களில் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஆனால், கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், 234 தொகுதிகளிலும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திலேயே ஜெயலலிதா வேட்பாளர்களை களமிறக்கினார். அதற்கு முன்பு வரை எந்தவொரு அரசியல் கட்சியும் தமிழ்நாட்டில் இதனை சாத்தியப்படுத்தியதாக தெரியவில்லை. குறிப்பாக 75 ஆண்டுகளை கடந்த திமுகவால் கூட, 234 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் தற்போது வரை வேட்பாளர்களை நிறுத்த முடியாமல் வெற்றிக்காக கூட்டணி கட்சிகளின் உதவியை நாட வேண்டியுள்ளது.
இந்நிலையில் தான் 2026ம் ஆண்டில் 200 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என, அக்கட்சியினர் சூளுரைத்து வருகின்றனர். அதற்கு முதலில் இதே கூட்டணி நிலவ வேண்டும். அதேநேரம், 10 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2021ம் ஆண்டு மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தது. ஆரம்பத்தில் அனைத்தும் நன்றாகவே இருந்தாலும், மாநில சட்ட-ஒழுங்கு என்பது இந்த ஆட்சிக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. அதிலும், திமுக நிர்வாகிகள் மீதே பல புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. குடும்ப அரசியல் கட்சி என பெயர்பெற்ற திமுகவிற்கு, மேலும் ஒரு கரும்புள்ளியாக முதல்முறையாக தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்டாலினின் புதல்வன் உதயநிதி தற்போது துணை முதலமைச்சர் பதவி வகித்து வருகிறார். அமைச்சர்களின் பேச்சு மற்றும் செயல்பாடு பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கல்விக்கடன் மற்றும் நீட் தேர்வு ரத்து போன்ற பல தேர்தல் வாக்குறுதிகளும் கிடப்பில் போடப்பட்டதும், 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு பலவீனமாக அமையலாம் என்பதே நிதர்சனம்.
இந்த சூழலில் தான் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் மாநில அரசியலில் வேகமெடுத்து வருகிறது. தேர்தலில் வலுவான கூட்டணியை அமைப்பது எப்படி அவசியமோ, அதேபோன்று எதிரி அமைப்பின் கூட்டணியை பலவீனப்படுத்துவதும் அவசியம். அதனை உணர்ந்தே விசிகவை கொண்டு விஜய் காய் நகர்த்துவதாகவும், அது எதிர்பார்த்த பலனை தந்தால் திமுக கூட்டணியை உடைக்க முடியும் என அவர் நம்புவதாகவும் அரசியல் வல்லுநர்கள் கணிக்கின்றனர்.