Mettupalayam : ”சுத்தம் செய்ய முடியாது” தட்டி கேட்ட இளைஞருக்கு அடி! கோவை கவுன்சிலர் அடாவடி!
எங்க ஏரியாவை ஏன் சுத்தமா வச்சுக்க மாட்றீங்க என தட்டி கேட்ட இளைஞரை அந்த பகுதியின் பெண் கவுன்சிலரும், அவருடைய கணவனும் தாக்கும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. இந்நிலையில் கழுத்து முறிவு ஏற்பட்டு அந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ள நிலையில், அந்த வீடியோ சமூக வளைத்தளங்களில் வைரலாக பரவி கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட 23 வது வார்டு பகுதியான ரயில்வே காலனியை சேர்ந்தவர் கௌதம். அந்த பகுதியில் கடந்த சில மாதங்களாகவே சரிவர தூய்மை பணி மேற்கொள்ளாமலும் சாக்கடைகள் தூர்வாராமலும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் குப்பைகள் தேங்கியும் கழிவு நீரால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை இருப்பதாக கௌதம் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த 23 வது வார்டு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் கவிதா மற்றும் அவரது கணவர் புருஷோத்தமன் ஆகிய இருவரும் ரயில்வே காலனி வசிக்கக்கூடிய கௌதம் வீட்டுக்கு சென்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
சுத்தம் செய்ய முடியாது என அடாவடியாக பேசிய பெண் கவுன்சிலர் கவிதா மற்றும் அவரது கணவர் புருஷோத்தமன் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து கவுதமை தாக்குகின்றனர். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
அந்த தாக்குதல் சம்பவத்தில் கௌதமுக்கு கழுத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டு அவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
இந்த சம்பவம் குறித்து கௌதம் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் அது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது
இந்நிலையில் மக்கள் பிரதிநிதி ஒருவர் அடாவடி தனமாக நடந்து கொண்ட வீடியோ கோவை மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.