Mayawati INDIA Bloc | மோடியை காப்பாற்றிய மாயாவதி! அந்த 16 தொகுதி இல்லன்னா... I.N.D.I.A ஆட்சிதான்
உத்தரபிரதேசத்தில் மாயாவதியில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து களமிறங்காமல் இந்தியா கூட்டணியுடன் கைகோர்த்திருந்தால், பாஜகவின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாகியிருக்கும். 16 இடங்களில் பாஜக கூட்டணி தோற்றிருக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
மக்களவை தேர்தலை பொறுத்தவரை மத்தியில் ஆட்சியமைக்கப் போவது யார் என்பதை தீர்மானிப்பதில் உத்தரப்பிரதேசத்திற்கு முக்கிய பங்கு இருக்கிறது. 80 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் பாஜகவுக்கு எதிராக அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியோடு காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது. 2019 தேர்தலில் பாஜக பெற்ற வெற்றியை இந்த முறை சாத்தியமாக்க முடியவில்லை. சமாஜ்வாடி 37 தொகுதிகள், காங்கிரஸ் 6 தொகுதிகள் என மொத்தம் 43 தொகுதிகளில் இந்த கூட்டணி வெற்றியை தட்டிச் சென்றது. தேசிய ஜனநாயக கூட்டணியின் பாஜா 33, ராஷ்டிரிய லோக் தளம் 2 என 35 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தநிலையில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்ற 16 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி வாக்குகளை பிரித்துள்ளது. அந்த தொகுதிகளில் பாஜக மற்றும் இந்தியா கூட்டணியினருக்கு இடையிலான வாக்கு வித்தியாசத்தை விட பகுஜன் சமாஜ் வேட்பாளர்கல் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. உதாரணமாக மிர்சாபூர் தொகுதியில் 37,810 வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளரை வீழ்த்தி பாஜக வெற்றி [பெற்றுள்ளது. அதே நேரத்தில் அந்த தொகுதியில் பகுஜன் சமாஜ் வேட்பாளர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 1,44,446.
ஒருவேளை பகுஜன் சமாஜ் கட்சி இந்தியா கூட்டணியுடன் இணைந்திருந்தால் பாஜகவுக்கான வெற்றி வாய்ப்பு குறைந்திருக்கும். மொத்தம் 16 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி வெற்றி வித்தியாசத்தைவிட அதிக வாக்குகளை பெற்றுள்ளது. அப்படி நடந்திருக்கும் பட்சத்தில் உத்தரபிரதேசத்தில் பாஜக கூட்டணியின் வெற்றி 19 இடங்களாக குறைந்திருக்கும். மத்தியிலும் ஆட்சி அமைப்பதற்கு பாஜகவுக்கு இன்னும் சிரமமான சூழல் உருவாகியிருக்கும்.
பகுஜன் சமாஜ் கட்சியை கூட்டணியில் சேர்க்க மாயாவதியிடம் இந்தியா கூட்டணி சார்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தோல்வியில் முடிந்தது. கடந்த 2019 தேர்தலில் 10 தொகுதிகளில் வென்ற சமாஜ்வாடி கட்சி, இந்த முறை ஒரு தேர்தலில் கூட வெற்றி பெறவில்லை என்றாலும், வாக்குகளை பிரிப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளது