Pavazhakundru Tiruvannamalai: திருவண்ணாமலை வரும் பக்தர்கள் பவழக்குன்றுக்கு செல்ல திட்டமிடுங்கள் - அங்கு என்ன ரகசியம்..?
திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில் உள்ள பவளகுன்றில் மறைந்துள்ள ரகசியங்கள்!
திருவண்ணாமலை என்றாலே அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது அண்ணாமலையார் தான், உலகப் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் உள்ளது பஞ்ச பூதங்களில் அக்னிஸ்தலம். இதுபோன்று பல்வேறு சிறப்புகளை வைத்துக்கொண்டு அமைதி சுருபமாக இருக்கும் இந்த திருவண்ணாமலையில், பல்வேறு பழைய சிறப்புகள் பலருக்கும் புதிய தாக இருக்கலாம். அதில் ஒன்றுதான் பவழக்குன்று. பல பொக்கிஷங்களை ஒளித்து வைத்திருக்கும் , சிவன் கோயிலின், பின் புறத்தில், அமைதி சுருபமாய் காட்சியளிக்கும் மலை கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2668 அடி உயரம் கொண்டவை அதில் சிறியதொரு மலைக்குன்றுதான் பவழக்குன்று இந்த குன்று இடத்திற்கு செல்ல, திருவண்ணாமலைக்கு ரயில் மார்க்கமாகவோ அல்லது பேருந்து மூலமாகவோ செல்ல வேண்டும்.
திருவண்ணாமலை வந்த பிறகு நீங்கள் எங்கிருந்து பார்த்தாலும் கோயிலின் கோபுரத்தின் உச்சியை காணலாம். பேருந்து நிலையத்திலிருந்து கோயிலுக்குச் செல்லும் பிரதான சாலையில் சிறிது தூரம் சென்றால், சின்னக்கடை எனும் தெரு ஒன்று வரும். இந்த தெருவில் நடக்கும்போது வலதுபுறமாக திருவண்ணாமலை மலைக்கு செல்லும் வழி தெரியும், அதேபுறம் தான் பவழக்குன்றும் அமைந்துள்ளது. ஏறக்குறைய 250 படிகட்டுகளை கடந்தால் எளிதில் அடைந்துவிடலாம் பவழக்குன்றின் உச்சியை. செல்லும் வழியில் தண்ணீர் தாகம் எடுத்தால் அங்கு அற்புதமான அருவி ஒன்று உள்ளது. அதில் எப்போதுமே தண்ணீர் வந்துகொண்டு இருக்கும் பருகி கொள்ளலாம்.
பவழக்குன்றுவின் மேலிருந்து கீழே பார்த்தால், அண்ணாமலையார் கோயிலின் முழு கட்டமைப்பு நம்மை அசரவைப்பதோடு, அழகாகவும் காட்சியளிக்கும். அழகாய் காட்சியளிக்கும் பவழக்கிரீஷ்வரர், அர்த்தநாதீஷ்வரர் மற்றும் முத்தாம்பிகையும் இக்கோயிலின் மூலஸ்தனத்தில் உள்ளனர். இந்த இடத்தில் தான் பல வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. இந்த கோயிலின் உட்புறத்தில் ரமண மகரிஷி தியானம் செய்த இடம் உண்டு. இதே இடத்தில் பல மகான்களும், ரிஷிகளும் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட அருமையான இடத்திற்கு நீங்கள் சென்றால் பேரமைதியை ருசிக்கும் ஓர் அரிய வாய்ப்பினை பெறுவீர்கள் என்பது உண்மையான ஒன்று . மேலும் இந்த பவழக்குன்று இடத்தை பற்றிய ஓர் வரலாற்றுச் சிறப்புமிக்க புராணக்கதையும் உண்டு; சிவபெருமான் தனது உடலிலும் சக்தியிலும் பாதியாகச் சக்தியைச் சேர்த்துக் கொண்டார் எனக் கதைகள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இது நிகழ்ந்த இடம் இந்த பவழக்குன்று தான் என்பது ஐதீகம்.
அன்னை பார்வதி அம்மையார் ஒருமுறை சிவனின் கண்களைச் சட்டென்று அவரது கைகளால் மூட, உலகமே இருண்டு போனது. அந்த இருளிலிருந்து உலகைக் காக்கவும், அவர் காஞ்சிபுரம் சென்று தவம் இருந்ததாகவும், அதற்கு சிவபெருமான் திருவண்ணாமலையில் உள்ள இந்த இடத்தில் சென்று தவம் மேற்கொள்ள கூறியதாக அனைவராலும் நம்பப்படுகிறது. அவர் கூறிய இடம் தான் இந்த பவழக்குன்று . அதன் பின்பு தான் பார்வதி அன்னை பவழக்குன்றில் வந்து தவம் இருந்ததாகவும், கார்த்திகை தீபத்திருநாளில் திருவண்ணாமலையின் உச்சியில் ஓர் தீப ஒளியாகத் தோன்றி, இறைவன் சிவபெருமான் அவருக்கு அருள்பாலித்து தன்னுடைய இடப்புறத்தை பார்வதிக்கு அளித்ததாகவும் புராணக்கதைகள் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட மக்களால் அறிய படாத நிகழ்வுகளால் ஜொலிக்கும் இடத்திற்கு, நீங்கள் இதுவரை செல்லவில்லை எனில் நிச்சயம் சென்று வாருங்கள். உங்கள் உள்ளம் பவழக்குன்றில் கொள்ளை போகலாம்!