WhatsApp Update: சுமார் வாட்சப்புக்கு ரூ.2000 கோடி அபராதம் விதித்த அரசு.. ஏன் தெரியுமா?
வாட்ஸ் அப் செயலி தனது பயனர்களின் விவரங்களை பேஸ்புக் நிறுவனத்தின் பிற செயலிகளுடன் பகிர்ந்துகொள்வதாக குற்றம் சாட்டப்பட்டது. விசாரணையின் முடிவில் வாட்ஸ்ஆப் செயலி விதிமுறைகளை மீறியது உறுதி செய்யப்பட்டது.
தனது பயனாளர்களின் தனியுரிமை சட்டங்களை மீறியதாகக்கூறி வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு அயர்லாந்து அரசு 225 மில்லியன் யூரோவை அபராதமாக விதித்துள்ளது.
உலக அளவில் அதிக நபர்கள் பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ் ஆப் உள்ளது. வாட்ஸ் ஆப்பினைக் கடந்த 2014ம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியது . அப்போது பாதுகாப்பான சேவையை வழங்க வாட்ஸ் ஆப் உறுதி பூண்டுள்ளதாக குறிப்பிட்டது. ஆனாலும் தனது பயனாளர்களின் தனியுரிமையை மீறுவதாக வாட்ஸ் ஆப் செயலி மீது அவ்வப்போது குற்றச்சாட்டு வருவது வழக்கமான ஒன்றாக உள்ளது.
இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு ஐரோப்பிய கூட்டமைப்பின் தனியுரிமை விதிகளை மீறியதாக வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்தது. வாட்ஸ் அப் செயலி தனது பயனர்களின் விவரங்களை பேஸ்புக் நிறுவனத்தின் பிற செயலிகளுடன் பகிர்ந்துகொள்வதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த விதிமீறல் குறித்து அயர்லாந்து அரசு விசாரணை நடத்தி வந்தது. விசாரணையின் முடிவில் வாட்ஸ் ஆப் செயலி அந்நாட்டின் விதிமுறைகளை மீறியது உறுதி செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. ஆனால் அப்போது விதிக்கப்பட்ட அபராதம் மிகவும் குறைவாக இருப்பதாக ஐரோப்பிய ஒழுங்குமுறையாளர்கள் தெரிவித்தனர். பல்வேறு காரணிகளின் அடிப்படையில் அப்போது முன்மொழியப்பட்ட அபராதத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அந்த தொகையினை மேலும் அதிகரிக்க வேண்டும் எனவும் அயர்லாந்து அரசிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இதையடுத்து, அயர்லாந்து நாட்டின் டப்ளினை மையமாகக் கொண்டு இயங்கும் தகவல் பாதுகாப்பு ஆணையமான (டி.பி.சி) இந்த அபராதத் தொகையை தற்போது அதிகரித்துள்ளது. வாட்ஸ் அப் செயலிக்கு 225 மில்லியன் யூரோ அபராதத்தை விதித்து தற்போது அயர்லாந்து அரசு உத்தரவிட்டுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 1948 கோடி ஆகும். இது பான்-ஐரோப்பிய அதிகாரங்களைக் கொண்ட டிபிசியால் விதிக்கப்பட்ட மிகப்பெரிய அபராதத்தொகையாகும். மேலும், ஐரோப்பிய ஒன்றிய சட்டங்களின் கீழ் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்திற்கு எதிராக விதிக்கப்படும் இரண்டாவது மிகப்பெரிய அபராதமாகும்.
ஆனால் இவ்வளவு பெரிய அபராதத் தொகையினை ஏற்றுக்கொள்ள முடியாது என வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய திட்டமிட்டு வருவதாகவும் வாட்ஸ் அப் நிறுவனம் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதேபோல கடந்த ஜூலை மாதத்தில் விதிகளை மீறியதாக லக்சம்பர்க் தனியுரிமை நிறுவனத்தால் அமேசான் நிறுவனத்திற்கு $ 886.6 மில்லியன் யூரோ அபராதமாக விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த தொகையை விட வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு தற்போது ஐரிஷ்அரசு விதித்துள்ள அபராதம் கணிசமாக குறைவாக உள்ளது என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.