எதிர்ப்பு காட்டும் ட்விட்டர்... தடை செய்ய இந்தியா முடிவு?
இந்தியாவில் ட்விட்டர் நிறுவனத்தின் எதிர்காலம் தொடர்பாக மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 25ஆம் தேதி முதல் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் அமலுக்கு வந்தன. இதை முதலில் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் ஏற்க மறுத்தன. பின்னர் ஃபேஸ்புக் நிறுவனம் புதிய விதிகளை ஏற்று கொள்வதாக கூறி மத்திய அரசிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. எனினும் ட்விட்டர் நிறுவனம் மட்டும் புதிய விதிகளை இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்நிலையில் இந்தியாவில் ட்விட்டர் நிறுவனத்தின் எதிர்காலம் குறித்து மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஏபிபி ஆங்கில தளத்திற்கு அவர் பேட்டியளித்துள்ளார். அதில், "ஒரு நாட்டில் நீங்கள் தொழில் செய்ய வேண்டும் என்றால் அந்த நாட்டில் உள்ள அரசியலமைப்பு சட்டங்கள் மற்றும் பிற சட்டங்களையும் ஏற்று நடக்க வேண்டும். அப்படி மதிக்கவில்லை என்றால் நாட்டில் தொழில் செய்ய கூடாது. இந்தப் புதிய விதிகள் தொடர்பாக பல விமர்சனங்கள் வருகிறது. அதை நாங்கள் தற்போது கேட்க தயாராக இல்லை.
புதிய விதிகளை ஏற்க முடியாது; ட்விட்டர் அறிவிப்பு
ட்விட்டர் நிறுவனம் இந்தியாவில் 9 கோடி வாடிக்கையாளர்களுக்கு மேல் வைத்துள்ளது. ஆகவே இந்த நிறுவனம் இந்தியாவில் செயல்பட மத்திய அரசின் விதிகளை ஏற்று நடக்க வேண்டும். இந்திய அரசு தனிநபரின் தகவல்கள் எப்போதும் கேட்காது. ஆனால் தீவிரவாதம், பெண்களுக்கு எதிரான குற்றம் ஆகியவற்றை செய்பவர்களின் செய்திகளை மற்றும் தகவல்களை தான் படிக்கும். ஒரு ஜனநாயக நாட்டில் இருப்பதால் நீங்கள் என்ன வேண்டுமென்றாலும் செய்ய முடியாது. ஜனநாயக நாட்டிலும் ஒரு சில விதிகளுக்கு கட்டுப்பட்டு தான் நடக்க வேண்டும். அமெரிக்காவில் எப்படி விதிகளை பின்பற்றி தொழில் செய்கிறார்களோ அதேபோன்று தான் இந்தியாவிலும் விதிகளை ஏற்று தொழில் செய்ய வேண்டும்.
ட்விட்டர் நிறுவனம் புதிய விதிகளுக்கு ஏற்ப ஒரு வழக்கறிஞரை நியமித்துள்ளது. ஆனால் இது விதிகளுக்கு எதிரானது. ஏனென்றால் புதிய விதிகளின்படி நிறுவனத்தில் பணியாற்றுபவர் தான் பிரதிநிதியாக இருக்க முடியும். அதை ட்விட்டர் நிர்வாகம் சரியாக செய்யவில்லை. மேலும் கடந்த வாரம் டெல்லியில் உள்ள ட்விட்டர் அலுவலகத்திற்கு காவல்துறையினர் நோட்டீஸ் கொடுக்க தான் சென்றனர். ஆனால் அவர்களிடம் இந்த நோட்டீஸை பெறாமல் இவற்றை அமெரிக்க அலுவலகம் தான் பார்த்து கொள்ளும் என்று ட்விட்டர் தெரிவித்துள்ளது. ட்விட்டர் நிறுவனம் நம் நாட்டின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை ஏற்கவில்லை என்றால் அந்த விவகாரம் தொடர்பாக அரசு ஆலோசித்து ஒரு முடிவை எடுக்கும். அப்போது அரசு எடுக்கும் முடிவை ட்விட்டர் நிறுவனம் ஏற்று தான் ஆகவேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
வாட்ஸ் அப் - மத்திய அரசு போட்டா போட்டி: குழப்பத்தில் சிக்கித்தவிக்கும் பயனாளர்கள்!