Social Eclipse : சூரிய கிரகணத்தின்போது சாப்பிடலாமா? அறிவியல் சொல்வது என்ன?
பொதுவாகவே கிரகணத்தன்று சில விஷயங்களை செய்யக்கூடாது என்று பெரும்பாலானவர்கள் பின்பற்றுவார்கள். அறிவியல் ரீதியாக என்ன சொல்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.
பூமி, சந்திரன், சூரியன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வு சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. சூரிய கிரகணத்தின்போது நிலவின் நிழல் பூமியின் மீது படர்ந்து செல்கிறது. இந்த நிழல் இருபகுதிகளைக் கொண்டது. ஒன்று முழுநிழல் பகுதி, மற்றது புறநிழல் பகுதி. முழுநிழல் பகுதியில் இருக்கும் ஒருவரால் சூரியனைக் காண இயலாது. சூரியனின் தோற்றத்தை நிலவு முழுமையாக மறைத்து விடும். இது முழு சூரியகிரணம். புறநிழல் பகுதியில் சூரியனின் ஒரு பகுதியிலிருந்து வரும் ஒளி மட்டும் வந்தடையும். எனவே. புறநிழல் பகுதியில் இருக்கும் ஒருவர் சூரியனின் ஒருபகுதியை மட்டும் காண்பர். மீதப்பகுதியை நிலவு மறைத்திருக்கும். இது பகுதி சூரியகிரகணம். இதுபோன்ற ஒரு பகுதி சூரியகிரகணம் இந்த ஆண்டு அக்டோபர் 25 ஆம் நாள் மாலை 4 மணிக்கு நிகழ உள்ளது.
ரஷ்யாவின் தெற்குப்பகுதிகள், கஜகிஸ்தான், ஐரோப்பிய நாடுகள், வட ஆப்பிரிக்கா, மத்தியக்கிழக்கு நாடுகள், ஆசியாவின் சில பகுதிகளில் பகுதி சூரிய கிரகணத்தைக் காணலாம். உலக அளவில் சூரிய கிரகணம் 14:19 (IST) மணிக்கு ஆரம்பித்து, 18:32 (IST) மணிக்கு முடியும். ரஷ்ய நாட்டின் மத்தியப்பகுதிகளில் சூரியனை 80 விழுக்காடு சந்திரன் மறைக்கும். சென்னையில் இந்திய நேரப்படி 5:13 மணிக்கு கிரகணம் ஆரம்பிக்கும். 5:44 மணிக்கெல்லாம் முடிந்து விடும். சூரியன் மறையும் நேரம் 5:44 மணியாக இருக்கும். அதிகபட்சம் 8 விழுக்காடு மட்டுமே சூரிய மறைப்பு இருக்கும். எனவே மிகக்குறுகிய காலம் மட்டும் மேற்கு வானில் சூரியன் மறையும்முன் இந்நிகழ்வு நடக்கிறது. இந்திய நகரங்களைப்பொறுத்தவரை, தலைநகர் டெல்லியில் மாலை 4.28 மணிக்கு தொடங்கி, 5.42 மணிக்கு நிறைவடையும். மும்பையில் 4.49க்கு ஆரம்பித்து 6.09 மணிக்கு முடிவடையும். சென்னையில் 5.13க்கு ஆரம்பித்து 5.45 மணிக்கு முடியும். கிரகணத்தின் போது நாம் காலம்காலமாக சில பழக்கங்களை பின்பற்றி வருகிறொம். அவை அறிவியல் பூர்வமாக ஆராய்ச்சியாளர் கூறும் கருத்துக்களோடு ஒப்பிட்டு பார்க்கலாம்
கிரகணத்தின்போது சாப்பிடலாமா?
கிரகணத்தின்போது சூரியனின் கதிர்கள் எல்லா உணவும் விஷமாக மாறிவிடுமா? மகாராஷ்ராவைச் சார்ந்த பாஸ்கரச்சாரியா ஆய்வு மையத்தின் உதவியோடு மைக்ரோ பயாலஜி ஆய்வாளர்கள் நான்குபேர் ஸ்ரீகாந்த் என்ற ஆய்வாளர் தலைமையில் 2010ஆம் ஆண்டு ஜனவரி 15 அன்று நிகழ்ந்த வளைய சூரியகிரகணத்தின் போது ஆய்வுகளை மேற்கொண்டனர். இந்த ஆய்வு முடிவுகள் ஜேனல் ஆப் இகோமைக்ரோபயாலஜி 2012 என்ற அறிவியல் ஆய்வு இதழில் வெளிவந்தன. சூரிய கிரகணத்தின்போது சமைத்த உணவுகள் கெட்டுப்போகின்றன , அதை தூக்கி எறியவேண்டும் என்ற கருத்துக்கு எந்த வித அறிவியல் பூர்வமான அடிப்படை ஆதாரங்கள் இல்லை என தெரிவித்துள்ளனர்.
சூரிய கிரகணத்தை யார் பார்க்கலாம் ? எப்படி பார்க்கலாம்?
சூரிய கிரகணம் என்பது எலலோரும் பார்க்க வேண்டிய ஒன்று சந்திரனின் மறைவில் சூரியன் மறைந்திருக்கும். இந்த அறிய நிகழ்வை வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது.சூரியனை எப்போதுமே வெறும் கண்களால் பார்க்கக்கூடாது.சூரியனின் ஒளியினால் நம் கண்கள் நிரந்தமாகக்கூட பாதிக்கலாம். சூரியனை சிறப்பாக பார்ப்பதற்கான ஒரு வழி . அதற்கென சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ள சூரிய வடிகட்டிகள்.இந்த வடிகட்டிகள் சூரிய ஒளியின் அளவை மட்டுமல்ல, புற ஊதாக்கதிர்களையும் வடிகட்டி பாதிப்பில் இருந்து பாதுகாக்கின்றது. சரியான வடிகட்டிகள் 99.99 சதவீதம் வடிகட்டி பாதுகாப்பாக பார்ப்பதற்கு உதவுகிறது. இது எளிய முறையில் அனைவரும் பார்ப்பதற்கான வழியாகும்.
உலகில் பல பகுதிகளில் சூரிய மற்றும் சந்திர கிரகணத்தின் போது கர்ப்பிணிப் பெண்களை பார்க்க அனுமதிப்பதில்லை. பார்க்கக்கூடாது என்ற மூட நம்பிக்கை இன்றும் உள்ளது. இந்த கிரகணங்களால் தாயையும் பிறக்காத குழந்தையையும் பாதிக்கும் என பலரும் நினைக்கின்றார்கள். உண்மையில், இந்த நம்பிக்கைக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இதுவரை இல்லை. எப்போதும் போல அன்றும் கர்ப்பிணிப் பெண்கள் நடமாடலாம், சாப்பிடலாம் எந்த மாற்றமும் ஏற்படாது. சூரிய கிரகணத்தை பார்க்க அனைவருக்கும் இருக்கும் முன்னெச்சரிக்கையே இவர்களுக்கும் பொருந்துமே தவிர, எந்த புதிய . கதிர்வீச்சுகளும் ஏற்படாது என அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.