வெளிவருகிறது Redmi Note 10 Lite! - இந்திய மார்க்கெட்டைக் குறிவைக்கும் ஷாவ்மி!
Redmi Note 10 Lite இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் கிடைக்கும் Redmi Note 9 Pro மாடலின் மேம்படுத்தப்பட்ட வடிவமாக Redmi Note 10 Lite இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Redmi Note 10 Lite இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மார்ச் மாதம், இந்தியாவில் அறிமுகமான Redmi Note 9 Pro மாடலின் மேம்படுத்தப்பட்ட வடிவமாக Redmi Note 10 Lite இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல், இந்தோனேசியா நாட்டில் Redmi Note 10 விற்பனையை ஷாவ்மி நிறுவனம் நிறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் சிப்செட் தட்டுப்பாடு காரணமாக, இதன் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Qualcomm Snapdragon 678 SoC என்ற சிப்செட் தற்போதைய ஆண்டின் தொடக்கத்தில் ஷாவ்மி நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.
Redmi Note 10 Lite வெளியாகவுள்ளதாக, கடந்த ஆகஸ்ட் 23 அன்று, கேக்பர் ஸ்கர்ஸிபெக் என்ற தொழில்நுட்ப வல்லுநர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். 2109106A1I என்ற சீரியல் நம்பர் இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதில் `I’ என்பது இந்தியாவைக் குறிக்கும் என்றும், விரைவில் இந்த மாடல் ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் எனவும் அவர் தனது கணிப்பை முன்வைத்துள்ளார்.
மேலும் இந்த ஸ்மார்ட்போனுக்கும் ‘கர்டேனா’ என்ற செல்லப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதே பெயர் Redmi Note 9 Pro மாடல் சர்வதேச அளவில் Redmi Note 9S என்ற பெயரில் வெளியான போது பயன்படுத்தப்பட்டது. இதன்மூலம், கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட Redmi Note 9 Pro மாடலைத் தற்போது ஷாவ்மி நிறுவனம் Redmi Note 10 Lite என்ற பெயரில் வெளியிடப்பட வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
#RedmiNote10Lite coming soon to India. Rebranded Redmi Note 9 Pro (India version, global Note 9S)... HOW MANY?! pic.twitter.com/DKl2tHRmXe
— Kacper Skrzypek 🇵🇱 (@kacskrz) August 23, 2021
ஷாவ்மி நிறுவனம் தனது விற்பனைத் திறனை மேம்படுத்தும் விதமாக, ஒரே மாடல் ஸ்மார்ட்போனில் சிறிய மாற்றங்களைச் செய்து, அவற்றிற்கு வேறு பெயர்களைச் சூட்டி, வெளியிட்டு அதிலும் வெற்றி கண்டு வருகிறது. மேலும் ஷாவ்மி நிறுவனத்திடம் இருந்து Redmi Note 10 Lite குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படாததால், இது எந்த மாற்றமும் இல்லாமல் Redmi Note 9 Pro மாடலையே வெளியிடுவார்களா அல்லது சில மாற்றங்களைச் செய்து வெளியிடுவார்களா என்று தகவல்கள் இன்னும் வரவில்லை.
இந்தோனேசியா நாட்டில் ஷாவ்மி நிறுவனம் Redmi Note 10 மாடல் ஸ்மார்ட்போன் விற்பனையை நிறுத்தியுள்ளது. இந்த மாடல் இந்தோனேசியா நாடு முழுவதும் விற்றுத் தீர்ந்துள்ளது. இதற்குக் காரணமாக, ஷாவ்மி நிறுவனத்திடம் சிப்செட் தட்டுப்பாடு நீடிப்பதாகக் கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்தும் ஷாவ்மி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்தோனேசியாவில் விற்பனை நிறுத்தப்பட்டிருக்கும் Redmi Note 10 மாடல் இந்தியாவில் இன்னும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.