D2H போல் D2M; இண்டர்நெட் தேவை இல்லாமல் நேரடியாக மொபைலில் டிவி பார்க்கும் வசதி… மத்திய அரசின் புதிய முயற்சி!
தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்க்க வாய்ப்புள்ளது. அவர்களின் லாபம் மொபைல் போனில் வீடியோ பார்பவர்களால்தான் வருகிறது. எனவே இது அவர்களின் வருவாயை பெரிதாக பாதிக்கும் என்பது உறுதி.
தொலைக்காட்சி சானல்களை நேரடியாக வீட்டிற்கு கொண்டு வந்த (டி2எச்) முறையை, மொபைல் போன்களில் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. D2M (நேரடி-க்கு-மொபைல்) என்று அழைக்கப்படும் இந்த தொழில்நுட்பம் மூலம் மொபைல் போனிலேயே இண்டர்நெட் வசதி இல்லாமல் தொலைக்காட்சி சானல்களை பார்க்கமுடியும் என்று கூறப்படுகிறது.
D2M திட்டத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள்
தொலைத்தொடர்புத் துறை (DoT), தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் (MIB) மற்றும் IIT- கான்பூர் ஆகியவை இணைந்து இதற்கான வேளைகளில் ஈடுபட்டு வருவதாக விஷயங்களை அறிந்த அரசு அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்க்க வாய்ப்புள்ளது. ஏனெனில் இது அவர்களின் வருவாயை பெருமளவு விழுங்கி விடும் என்பது உறுதி. அவர்களின் பெருமளவு லாபம் மொபைல் போனில் விடியோ பார்பவர்களால்தான் வருகிறது. இது கண்டிப்பாக அவர்களின் 5ஜி இணைய பயன்பாட்டை பெரிதாக பாதிக்கும்.
தொலைதொடர்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை
"நாங்கள் இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறோம். டெலிகாம் ஆபரேட்டர்கள் உட்பட அனைத்து பங்குதாரர்களையும் சந்தித்த பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும்" என்று அதிகாரிகளில் ஒருவர் கூறினார். அடுத்த வாரம் இப்பிரச்சினை தொடர்பான ஒரு கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் DoT, MIB, IIT-கான்பூர் அதிகாரிகள் மற்றும் தொலைத்தொடர்பு மற்றும் ஒளிபரப்புத் துறையின் பிரதிநிதிகள் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது.
ஏன் மொபைலில் டிவி வேண்டும்?
ஒளிபரப்பு மற்றும் பிராட்பேண்ட் இரண்டின் மூலமும் ஒருங்கிணைந்து இதனை வழங்குவதற்கான திட்டம் வேண்டும் என்பது அரசாங்கத்தின் நம்பிக்கை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது, நாட்டில் டிவிகள் 21 கோடியில் இருந்து, 22 கோடி வரை மட்டுமே உள்ளன. அதே நேரத்தில் 80 கோடி ஸ்மார்ட்ஃபோன்கள் உள்ளன. இது 2026 ஆம் ஆண்டுக்குள் 100 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிக்கைகளின்படி, 80% இணைய பயன்பாடு வீடியோக்கள் பார்ப்பதில் தான் உள்ளது. இந்த தரவுகள் தான் மொபைலில் டிவி-யை கொண்டு வர ஊக்குவிக்கிறது.
இது பயனர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும்
"இந்த சந்தை மிகப்பெரியது, குறிப்பாக கல்வி மற்றும் அவசர எச்சரிக்கை அமைப்புகள் போன்ற பிற தேவையான செய்திகளை கொண்டு சேர்க்க இதைப் பயன்படுத்த அரசாங்கம் விரும்புகிறது," என்று அதிகாரிகளில் ஒருவர் கூறினார். ஐஐடி-கான்பூர் கடந்த ஆண்டு இந்தியாவிற்கான D2M ஒளிபரப்பு மற்றும் 5G பிராட்பேண்ட் கன்வர்ஜென்ஸ் குறித்த திட்ட வெள்ளை அறிக்கையை வெளியிட்டது. அதன் படி, D2M நெட்வொர்க் பிராட்பேண்ட் மற்றும் பிராட்காஸ்டிங் ஆகிவற்றை ஒருங்கிணைப்பதால், விலையுயர்ந்த மொபைல் பிராட்பேண்ட் நெட்வொர்க்குகளை மட்டும் நம்பாமல், குறைந்த மாதாந்திர விலையில் அன்லிமிட்டட் வீடியோ மற்றும் தொலைக்காட்சி கண்டெண்டுகளை இது அணுக உதவும் என்று தெரிகிறது.